Published : 06 Oct 2020 06:55 AM
Last Updated : 06 Oct 2020 06:55 AM
விவசாயிகளை மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் சங்ருரில் நேற்று நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மீது அடுத்தடுத்து மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசை கவனித்தால் கடந்த 6 ஆண்டுகளில் ஏழை மக்களின் நலனுக்காக ஒரு கொள்கையைக் கூட அறிமுகம் செய்யவில்லை என்பது தெரிய வரும்.
கறுப்பு பணத்தை எதிர்த்து போராடவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதாக கூறினார்கள்.
ஆனால், இந்த நடவடிக்கையால் வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் நாடே நின்றது. மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் போடுகின்றனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவின் கோடீஸ்வரர்களுக்கு கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு வழிவிடும் வகையில் சிறு, நடுத்தர வியாபாரிகளைக் குறி வைத்தே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை கொண்டு வரப்பட்டன.
கரோனா காலத்தில் ஏழைகளுக்கு உதவுங்கள் என்றும் பசியோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் தொழிலாளர்களுக்கு உதவுமாறும் பிரதமர் மோடியை கேட்டோம். ஆனால், மோடி இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரோனா காலத்தில் விவசாயிகளுக்கு எதிராக கறுப்பு சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இப்படி அவசரமாக இந்த சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? இந்த சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளை மத்திய அரசு அழித்து வருகிறது. அவர்களின் கழுத்தை அறுக்கிறது. விவசாயிகளால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து அவர்கள் இதைத் செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் சக்தி அவர்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT