Published : 30 Sep 2015 04:50 PM
Last Updated : 30 Sep 2015 04:50 PM
பிஹார் தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் பிரச்சனை அனைத்து கட்சிகளிலும் நிலவுகிறது. இதில் அதிகமாக, தம் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களை வேட்பாளர்களாக்கி உள்ளது காங்கிரஸ்.
அக்டோபர் 12 முதல் ஐந்து கட்டங்களாக துவங்க இருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நித்திஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ‘மஹா கூட்டணி’ அமைத்து போட்டியிடுகின்றனர். இதில், 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள காங்கிரஸில் சுமார் 12 வேட்பாளர்கள் அதன் கூட்டணி கட்சிகளில் இருந்து தாவியவர்களாக உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டு தோற்ற இவர்களுக்கு, காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் பிஹார் மாநில நிர்வாகிகள் கூறுகையில், ‘வழக்கமாக கூட்டணிக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிப்பதில்லை. ஆனால், நித்திஷ் மற்றும் லாலு தம்மால் வாய்ப்பு அளிக்க முடியாத சிலருக்கு, கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுக் கொள்ளும்படி பரிந்துரைத்து விட்டனர். இவர்களுக்கு வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதால் எங்கள் கட்சியில் போட்டியிட எளிதாக வாய்ப்பு கிடைத்து விட்டது.’ எனத் தெரிவிக்கின்றனர்.
இந்தவகையில் முக்கியமானவராக, நவாதா தொகுதியின் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏவான பூர்ணிமா யாதவ் உள்ளார். இவர், அருகிலுள்ள கோவிந்த்பூரில் காங்கிரஸ்
சார்பில் போட்டியிடுகிறார். இவரது கணவர் கவுசல் யாதவிற்கும் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தமையால், பூர்ணிமா காங்கிரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க்கிறார். இவர்களுடன், கடந்த தேர்தலில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன் குமாருக்கும் காங்கிரஸில் வாய்ப்பு கிட்டியுள்ளது. பிஹாரில் இடங்களில் போட்டியிடும் லோக் ஜன சக்தி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் முக்கிய கூட்டணிக் கட்சி ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT