Published : 03 Oct 2020 03:07 PM
Last Updated : 03 Oct 2020 03:07 PM
ஹாத்தரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பரிதாப மரணம் தொடர்பான விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்மிருதி இரானி கூறும்போது, “முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளார். ஹாத்தரஸ் போலீஸ் உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்துள்ளது.
சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை வெளியாகி விட்டால் யோகி நிச்சயம் கடும் நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார்.
அவர் மேலும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் போது, “மக்கள் காங்கிரஸ் என்ன மாதிரியான அரசியல் செய்கிறது என்பதை அறிந்துதான் 2019-ல் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
ஜனநாயகத்தில் எதை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம், நாம் அதை நிறுத்த முடியாது. ஆனால் ஹாத்தரஸில் இவர்களது செயல்பாடு அரசியல் ஆதாயம் தானே தவிர நீதிக்காக அல்ல.
மோடி அரசின் கீழ்தான் நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ரூ.9,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகளிருக்கென தனி போலீஸ் பிரிவு மோடி ஆட்சியின் வரலாற்றுத் தருணமாகும்.
மகளிர் உதவி எண் மூலம் சுமார் 55 லட்சம் பெண்கள் உதவி பெற்றுள்ளனர்” என்றார் ஸ்மிருதி இரானி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT