Published : 03 Oct 2020 03:18 PM
Last Updated : 03 Oct 2020 03:18 PM
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்திய பின்பும், உத்தரப் பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக காட்டாட்சிதான் தொடர்கிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீஸார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார்.
அதன்பின் போலீஸார் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களைக் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர்.
இந்தச் சூழலில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி பூமி பூஜையும் செய்துவிட்டார். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் இன்னும் வரவில்லை.இன்னும் காட்டாட்சி தொடர்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமாகவே இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஹாத்தரஸில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் போராட்டத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உயிரிழக்கும் நேரத்தில் அளித்த வாக்குமூலத்தில், தான் பலாத்காரம் செய்யப்பட்டேன் எனத் தெரிவி்த்துள்ளார். ஆனால், உ.பி. அரசு அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று மறுக்கிறது.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் பல்ராம்பூரில் மற்றொரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் டெல்லியில் ஆளும் ஆட்சியாளர்களையும் நடவடிக்கை எடுக்க நகர்த்தவில்லை. யோகி ஆதித்யநாத் அரசையும் நடவடிக்கை எடுக்க நகர்த்தவில்லை.
அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை. எதற்காக எதிர்க்கட்சிகள் இப்படி அழுது கூக்குரலிடுகிறார்கள் என்றே உ.பி. அரசு தொடர்ந்து கூறுகிறது. ஆனால், ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படாவிட்டால், எதற்காக போலீஸார் நள்ளிரவில் அவசரமாக அந்தப் பெண்ணின் உடலைத் தகனம் செய்தார்கள்.
முன்பு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, யோகி ஆதித்யநாத்துக்கு அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றார். அப்போது, யோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் கண்ணீர் வடித்துப் பாதுகாப்புக் கேட்டார். இப்போது, யோகிதான் மாநில முதல்வராக இருக்கிறார். ஆனால், அங்கு வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
ராகுல் காந்தி ஹாத்தரஸுக்குச் செல்ல முயன்றபோது போலீஸார் அவரைத் தடுத்து, சட்டைையப் பிடித்துக் கீழே தள்ளியுள்ளார்கள். மிகப்பெரிய அரசியல் கட்சியின் புகழ்பெற்ற தலைவரை அவமதிப்பது, ஜனநாயகத்தின் கூட்டுப் பலாத்காரம்.
ஹாத்தரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீஸார் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள். எந்த இந்து பாரம்பரியத்தில் இந்த மனிதநேயமற்ற செயல் பொருந்தும்.
மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரு சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். அப்போது, முதல்வர் யோகியின் அறிக்கைகளைப் பார்த்தோம், இந்துத்துவா குறித்து பாஜக பேசியதைக் கேட்டோம். ஆனால், ஹாத்தரஸ் சம்பவத்தில் யோகியும், பாஜகவும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?
பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் சுஷாந்த் மரணம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அதே நபர்கள், ஹாத்தரஸ் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று பேசுகிறார்கள். அந்தப் பெண் இறக்கும்போது அளித்த வாக்குமூலத்துக்கு எந்த மதிப்பும் இல்லை என்கிறார்கள். இந்த தேசம் ஒருபோதும் உயிரற்று, உதவியற்று கடந்த காலங்களில் இருந்ததில்லை''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT