Published : 03 Oct 2020 02:28 PM
Last Updated : 03 Oct 2020 02:28 PM
உ.பி.யின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் இன்று பிற்பகலில் வருகை தர உள்ளதால், டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்க காங்கிரஸ் பிரமுகர்கள் சென்றபோது அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
கடந்த வியாழக்கிழமை ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீஸார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார்.
அதன்பின் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீஸார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர்.
பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தியையும், பிரியங்காவையும் சந்திக்க விடாத வகையில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலுவை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அன்ஸு அவஸ்தி கூறுகையில், “மாநிலத் தலைவர் அஜய் குமார் லாலுவின் வீட்டைச் சுற்றி போலீஸார் பாதுகாப்பில் உள்ளனர். யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். அஜய் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் சேரக்கூடாது, பேரணியில் இணையக்கூடாது என்பதற்காக தடுக்கப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி. மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் நொய்டா நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவுதம் புத்தாநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையான ஆய்வுக்குப் பின்பே அனுப்பப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT