Published : 03 Oct 2020 01:43 PM
Last Updated : 03 Oct 2020 01:43 PM
பிஹார் தேர்தலில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியும் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் உள்ளது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி ஆகியவற்றின் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு முடியாமல் இருப்பது காரணமாகி உள்ளது.
பிஹாரில் ஆளும் பாஜக தலைமையிலான பாஜக கூட்டணியின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இக்கூட்டணியில், லாலு பிரசாத் யாதவ் கட்சியின் தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து விலகிய இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா இணைந்துள்ளது.
பிஹாரின் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் தலைமையிலான அக்கட்சி தலீத் வாக்குகளை ஆதாரமாகக் கொண்டது. ஏற்கனவே அதில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் தலீத் கட்சியான லோக் ஜன சக்திக்கு இது நெருக்கடியாகி உள்ளது.
கடந்த 2015 தேர்தலின் கூட்டணியில் நிதிஷ்குமார் லாலுவுடன் இணைந்து போட்டியிட்டதால் பாஸ்வானுக்கு அதிகமாக 42 தொகுதிகள் கிடைத்தன. இதில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது அமைச்சர் பாஸ்வானின் கட்சி.
இவரது கட்சியில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் பாஸானின் மகனும் மக்களவை எம்.பியுமான சிராக் பாஸ்வானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தலைவரான சிராக், 60 தொகுதிகள் வேண்டும் என வற்புறுத்துகிறார்.
இது கிடைக்கவில்லை எனில் தாம் நிதிஷ் கட்சியின் போட்டியிடும் தொகுதிகளில் 143 வேட்பாளர்களை போட்டியிட வைப்பதாகவும் சிராக் மிரட்டி வருகிறார். இதன் மீதான இறுதி முடிவை இன்று மாலை நடைபெறவிருக்கும் தம் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் எடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜக கூட்டணியில் முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்டிரிய சமதா லோக் தளம் மீண்டும் இணைய விரும்புவதால் நெருக்கடி அதிகமாகி உள்ளது.
இதேநிலை, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான லாலுவின் மெகா கூட்டணியிலும் நீடித்தது. கால்நடைத்தீவன வழக்கில் சிக்கிய லாலு சிறையில் இருப்பதால் அவரது மகனான முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் முக்கியக் கூட்டணியான காங்கிரஸுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க தேஜஸ்வீ முன்வந்தது. ஆனால், பிஹார் காங்கிரஸார் இந்தமுறை 80 தொகுதிகள் கேட்டு வற்புறுத்தியது.
இந்நிலையில், பிஹார் தலைவர்களை தவிர்த்த தேஜஸ்வீ டெல்லியில் ராகுல் காந்தியுடன் நேரடி பேச்சுவார்த்தையை துவக்கினார். ராகுலாலும் இப்பிரச்சனை முடிக்க முடியாமல் அதில் பிரியங்கா வத்ரா நேற்று தலையிட்டு பேசினார்.
இதன் காரணமாக காங்கிரஸுக்கு 70, இடதுசாரிகளுக்கு 30 தொகுதிகள் அளிக்க தேஜஸ்வீ ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மீது இறுதி அறிவிப்பும் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா கூட்டணியில் புதிதாக சேர விரும்பும் இடதுசாரிக் கட்சிகள் 40 தொகுதிகளும் கோரின. இவர்களில் எவருக்கும் ஒரு எம்எல்ஏவும் இல்லாமல் சிபிஐ எம்எல் மட்டும் 3 இல் வெற்றி பெற்றிருந்தது.
243 தொகுதிகள் கொண்ட பிஹாரில் மூன்றுகட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் அக்டோபர் 2, இரண்டாவது நவம்பர் 3 மற்றும் கடைசி கட்டம் 7 ஆம் தேதியிலும் நடைபெறுவதன் முடிவுகள் 10 இல் வெளியாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT