Last Updated : 03 Oct, 2020 08:14 AM

 

Published : 03 Oct 2020 08:14 AM
Last Updated : 03 Oct 2020 08:14 AM

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பெங்களூருவில் அபராதம் ரூ.1,000 கிராமப்புறங்களில் ரூ.500 ஆக உயர்வு: 5 முறைக்கு மேல் சிக்கினால் கிரிமினல் வழக்கு

பெங்களூரு

பெங்களூருவில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகை ரூ.200-ல் இருந்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில தலைமைச் செயலர் விஜயபாஸ்கர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பெங்களூரு, குல்பர்கா, மங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கரோனா வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பதுகுறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. திரையரங்கங்கள் வரும் 15-ம் தேதி 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது போன்றவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அபராதத் தொகைரூ.500 ஆக அதிகரிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதவர் களுக்கு விதிக்கப்பட்ட‌ ரூ.200 அபராதத் தொகை திடீரென அதிகரிக்கப்பட்டதற்கு பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கரோனா ஊரடங்கினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக, அரசே குறைந்த விலையில் முகக் கவசம் விற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து துணை முதல்வர் அஷ்வத் நாராயண் கூறும்போது, "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர்ந்து 5 முறைக்கும் அதிகமாக முகக் கவசம் அணியாமல் பிடிபடுவோர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x