Published : 02 Oct 2020 02:52 PM
Last Updated : 02 Oct 2020 02:52 PM
விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைத்து அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு, வேளாண் கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழாவும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ மூலம் தொண்டர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
" விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் மீது மிகுந்த கருணையும், அன்பும் கொண்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஜீவன் கிராமங்களி்ல்தான் இருக்கிறது, வயல்களில்தான் இருக்கிறது என்று காந்தியடிகள் கூறினார்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று முழக்கத்தை தேசத்துக்கு அளித்தவர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், இன்று விவசாயிகளும், வேளாண் தொழிலாளர்களும் மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை எதிர்த்து வீதியில் போராடி வருகிறார்கள்.
விவசாயிகள் தங்களின் வியர்வையைச் சிந்தி நாட்டுக்கு உணவு அளிக்கிறார்கள், ஆனால், மோடி அரசு அவர்களை ரத்தக் கண்ணீர் வடிக்கவைக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த சட்டமும் இயற்றும் முன் மக்களின் ஒப்புதலைப் பெற்று, மக்களின் நலனில் அக்கறை வைத்து இயற்றியது. ஜனநாயகம் என்பது, நாட்டில் ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், ஒவ்வொரு குடிமகனின் அனுமதியுடன் எடுப்பதாகும்.
மோடி அரசு இதில் நம்பிக்கை வைத்துள்ளதா. ஒரு அவசரச்சட்டத்தின் மூலம் விவசாயிகளின் உரிமையான போதுமான இழப்பீடு வழங்கும் சட்ட உரிமையை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வேளாண் கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும். தேசத்தின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கல் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன், விவசாயிகள் நடத்தும் போராட்டமும், தொழிலாளர்கள் நடத்தும் போராட்டமும் வெற்றி பெறும்.
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு இரு வேளை உணவு கொடுக்க முடிந்ததே. விவசாய சகோதரர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகுமா.
இன்று, இந்த தேசத்தின் பிரதமர், தேசத்துக்கே அன்னம் வழங்கும் விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைக்கிறார். விவசாயிகளுக்காக அவர்களை ஆலோசிக்காமல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆலோசனைகூட செய்யப்படவில்லை, அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சில நண்பர்களுடன் பேசிவிட்டு இந்த கறுப்புச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்போதுகூட விவசாயிகளின் குரலைக் கேட்கவில்லை.இதனால், விவசாயிகள் வேறுவழியின்றி அமைதியாக, மகாத்மா காந்தி வழியில் சாலையில் அமைதியாகப் போராடி வருகிறார்கள்.
விவசாயிகளின் குரலைக் கேட்காமல், ஜனநாயகத்துக்கு விரோதமாக, மக்களுக்கு எதிரான அரசு விவசாயிகள் மீது தடியடி நடத்துகிறது. நமது விவசாயிகளும், தொழிலாளர்களும் என்ன கேட்டார்கள். தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய சரியான விலை இந்த சட்டத்தில் கேட்டார்கள், இது அவர்களின் அடிப்படை உரிமைதானே.
விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் மண்டிகள் அழிக்கப்பட உள்ளன. பதுக்கல்கார்களுக்கு சுதந்திரமாக உணவு தானியங்களை பதுக்குவார்கள். விவசாயிகளின் நிலம், கார்ப்பரேட் கைகளில் ஒப்படைக்கப்படும்.
கோடிக்கணக்கான சிறு விவசாயிகளை யார் பாதுகாப்பது. மண்டிகளில் பணியாற்றும் சிறிய கடை உரிமையாளர்கல், தொழிலாளர்கள் என்ன ஆவார்கள். அவர்களின் உரிமைகளை யார் பாதுகாப்பது.இதைப்பற்றி மோடி அரசு நினைத்துப் பார்த்ததா.
நிலம் கையகப்படுத்தும் சட்டம், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தை அவசரச் சட்டத்தின் மூலம் மாற்றமுடியவில்லை என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT