Last Updated : 02 Oct, 2020 02:02 PM

3  

Published : 02 Oct 2020 02:02 PM
Last Updated : 02 Oct 2020 02:02 PM

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற திரிணமூல் காங். எம்.பி. டெரீக் ஓ பிரையன் தடுத்து நிறுத்தம்; போலீஸார் தள்ளியதில் கீழே விழுந்தார்

கீழே தள்ளிவிட்ட போலீஸாரைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட திரிணமூல் எம்.பி. டெரீக் ஓ பிரையன் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தி்ல் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் உள்ளிட்டோரை போலீஸார் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தினர். போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் டெரீக் ஓ பிரையன் கீழே விழுந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.

இந்நிலையி்ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து நேற்று ஹத்ராஸ் சென்றனர். போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திலும், தள்ளுமுள்ளுவிலும் ராகுல் காந்தி கீழே தள்ளிவிடப்பட்டார். அதன்பின் போலீஸார் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை கைது செய்து அழைத்துச் சென்று சில மணிநேரத்துக்குப்பின் விடுவி்த்தனர்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரீக் ஓ பிரையன் தலைமையில் காகோலி கோஷ் தஸ்திதார், பிரதிமா மோண்டல், முன்னால் எம்.பி. பிரதிமா மோண்டல் ஆகியோர் ஹர்தாஸ் மாவட்டத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்றனர்.

ஆனால் ஹர்தாஸ் மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருக்கும் கிராமத்துக்கு 1.5 கி.மீ தொலைவுக்கு முன்பே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் எம்.பி. தலைமையிலான குழுவினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது போலீஸாருக்கும், ஓ பிரையன் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எம்பி ஒருவர் எழுப்பிய கேள்வியில், “ எதற்காக எங்களைத் தடுக்கிறீர்கள். அமைதியான முறையில் ஹர்தாஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துஆறுதல் தெரிவிக்க இருக்கிறோம்.

அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து வருகிறோம். முகக்கவசம் அணிந்திருக்கிறோம். ஆயுதங்கள் ஏதும் இல்லை. என்ன மாதிரியான காட்டாட்சி இது, மக்கள் பிரதிநிதிகளைக் கூட அந்த குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், டெரீக் ஓபிரையனை போலீஸார் பிடித்து கீழே தள்ளினர். இதில் லேசான காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் போலீஸார் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவித்து, ஓ பிரையன் எம்.பி. உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x