Published : 02 Oct 2020 01:55 PM
Last Updated : 02 Oct 2020 01:55 PM
கர்நாடக மாநில திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் 4 பேருக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் பெயரில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் வரும் 18-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து கர்நாடக மாநிலத் திமுக அமைப்பாளா் ந.ராமசாமி கூறியதாவது:
’’திமுக தலைமைக் கழகம் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளின் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. இதனைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல் கர்நாடக மாநில திமுக சார்பில் கட்சி பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி இந்த ஆண்டு 4 மூத்த நிர்வாகிகளுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் பெயர்களில் விருது வழங்குகிறோம்.
அதன்படி பெரியார் விருது சகாயபுரம் வார்டு திமுக செயலாளர் ஏ.பி.அன்புமணிக்கும், அண்ணா விருது பசவனகுடி வார்டு திமுக செயலாளார் த.முருகேசனுக்கும், கலைஞர் விருது வசந்த் நகர் வார்டு திமுக செயலாளர் ரா.நாம்தேவுக்கும், பேராசிரியர் விருது காளி ஆஞ்சநேயா கோயில் வார்டைச் சோ்ந்த முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணிக்கும் வழங்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் முன்னோடிகளின் பெயரில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். அக்டோபர் 18-ம் தேதி பெங்களூருவில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், ஆந்திர மாநில அமைப்பாளர் கே.எம்.மூர்த்தி, கேரள மாநில அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன், மகாராஷ்டிர மாநில அமைப்பாளர் அலி ஷேக் மீரான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர்'’.
இவ்வாறு ராமசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநில அளவிலான உள்ளூர் நிர்வாகிகள் கட்சியால் கவுரவிக்கப்படுவது, தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT