Published : 02 Oct 2020 08:06 AM
Last Updated : 02 Oct 2020 08:06 AM
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் லடாக் பகுதியிலுள்ள உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) இந்தியாவும் ராணுவத்தை குவித்துள்ளது. இதையடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகஎல்லைப் பகுதிக்கு நிர்பய் ஏவுகணைகளை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. 1,000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கக்கூடியவை இந்த ஏவுகணைகள். இந்த ஏவுகணைகள் அடுத்த மாதம் 7-ம் கட்டமாக பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளன. அதன் பிறகுஇந்த ஏவுகணைகள் ராணுவம், கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன. ஆனால் அதற்கு முன்னதாகவே எல்லைப் பகுதிக்கு நிர்பய் ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த வகை ஏவுகணைகளை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன்பெற்ற இந்த ஏவுகணை 1,000 முதல் 1,500 கி.மீ. வரையிலான தொலைவு வரை சென்று தாக்கும் வல்லமை உடையதாகும்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 300 கிலோ வெடிபொருளுடன் வானிலிருந்து வான் இலக்கை தாக்கக் கூடிய மற்றும் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள் நமக்கு தற்போது முக்கிய அரணாகத் திகழ்கின்றன. திபெத் மற்றும் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள சீன விமானப்படை தளங்கள் மட்டுமின்றி இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன போர்க் கப்பல்களையும் இவை கவனித்துக் கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT