Last Updated : 01 Oct, 2020 02:29 PM

1  

Published : 01 Oct 2020 02:29 PM
Last Updated : 01 Oct 2020 02:29 PM

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் : கோப்புப்படம்

புதுடெல்லி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனக் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி அறிவித்தது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் 3 மாதம் சிறையும், 3 ஆண்டுகள் வழக்கறிஞராகச் செயல்படவும் தடை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் பிரசாந்த் பூஷண் ஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்தினார்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இரு தனித்தனி மறு ஆய்வு மனுக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஒரு மறு ஆய்வு மனு, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னைக் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு எதிராகவும், 2-வது மறு ஆய்வு மனு, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனக்கு அளிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்துக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2-வது மறு ஆய்வு மனுவை வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண், அனைவரின் முன்னிலையிலும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்ய மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். தான் எழுப்பிய சட்டம் குறித்த கேள்விகளை அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x