Published : 01 Oct 2020 02:15 PM
Last Updated : 01 Oct 2020 02:15 PM
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட விமான சேவை, விமானம் ரத்து செய்யப்படுவது தொடர்பாகவும், அதை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன என்பதைக் கருத்தில் கொண்டு எத்தனை விமான சேவை இயக்கப்பட்டது என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவைத்தில் சிக்கியுள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்டு வரக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து குவைத்தில் சிக்கியுள்ள சுமார் 2 ஆயிரம் தமிழகத் தொழிலாளர்களை மீட்டுக் கொண்டு வரக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விவரங்களை இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? குறிப்பாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட விமான சேவை தொடர்பாகவும், பிற விமான சேவை தொடர்பாகவும் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசு தாக்கல் செய்த அந்த விவரங்கள் தெளிவாக இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக, விமான சேவை, விமானம் ரத்து செய்யப்படுவது தொடர்பாகவும், அதை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன என்பதைக் கருத்தில் கொண்டு எத்தனை விமான சேவை இயக்கப்பட்டது, எந்தெந்த நாட்களில் எப்போது இயக்கப்பட்டது, ரத்து செய்யப்பட்ட விமானம் மற்றும் அதில் பயணிக்க இருந்த பயணிகள் விவரம் என அனைத்தையும் தெளிவாக விவரித்து 1 வாரத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT