Published : 01 Oct 2020 08:07 AM
Last Updated : 01 Oct 2020 08:07 AM

பாபர் மசூதி வழக்கு: கடந்த வந்த பாதை..

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை ஒரு பார்வை:

1528: முகலாய மன்னர் பாபரின் கமாண்டராக இருந்த மிர் பஹி என்பவர் பாபர் மசூதியை கட்டினார்.

1885: சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு வெளியில் கூடாரம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

1949: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மத்திய கோபுரத்துக்கு வெளியில் ராம் லல்லா சிலை வைக்கப்பட்டது.

1950: ராம் லல்லா சிலையை வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு தாக்கல் செய்தார். ராம் லல்லா சிலையை அங்கே தொடர்ந்து வைத்திருக்கவும் வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி ராமச்சந்திர தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

1959: சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ஒப்படைக்க கோரி, நிர்மோகி அகாரா வழக்கு தொடர்ந்தது.

1961: அந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்க கோரி, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

1986: சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்துக்கள் வழிபட திறந்துவிடும்படி, உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.1989: சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிச.6,1992: பாபர் மசூதி கோபுரம் இடிக்கப்பட்டது.

டிச.1992: இதுதொடர்பாக அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட மற்றவர்கள் மீது தனியாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அக்.1993: அத்வானி உட்பட தலைவர்கள் பலருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மே.2001: அத்வானி, ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையை, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைவிட்டது.

நவ.2004: விசாரணை கைவிடப்பட்டதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதில் லக்னோ அமர்வு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது.

மே.2010: சிபிஐ மறுபரிசீலனை மனு விசாரணைக்கு தகுந்ததாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செப்.2010: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 பேரும் சரி சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மே.2011: அயோத்தி நிலம் சர்ச்சை வழக்கில், தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

பிப்.2011: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

மார்ச்2017: பாஜக தலைவர்களுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அயோத்தி நில சர்ச்சையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

ஏப்ரல்: குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நவ.2019: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்கு பதில் மசூதி கட்டிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆக.2020: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

செப்.30: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x