Last Updated : 30 Sep, 2020 05:25 PM

2  

Published : 30 Sep 2020 05:25 PM
Last Updated : 30 Sep 2020 05:25 PM

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தகவல்

பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, உமா பாரதி : கோப்புப்படம்

லக்னோ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஜபார்யப் ஜிலானி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார். அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது எனத் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பு ககுறித்து மூத்த வழக்கறிஞரும் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான ஜபார்யப் ஜிலானி கூறுகையில், “நூற்றுக்கணக்கானோர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளார்கள் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டோர் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிபிஐ அளித்த ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. ஆதலால், முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். எங்கள் வாரியமும் மேல்முறையீடு செய்யும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. ஆனால், நீதிமன்றமோ எந்த சதியும் இல்லை என்கிறது. ஐபிசி 153-ஏ, 153-பி பிரிவின் கீழ் அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக வழக்குஇருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், சாட்சியங்கள் அளித்தவர்களும் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஏராளமானோர் சாட்சியங்களாக வழக்கில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். ஆதலால் முஸ்லிம் தரப்பில் சாட்சியங்களும், பாதிக்கப்பட்டோரும் மேல்முறையீடு செய்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஹாஜி மெகபூப், ஹபிஸ் அக்லக் ஆகியோர் மேல்முறையீடு செய்வார்கள். மற்றவர்கள் மேல்முறையீடு செய்வார்களா என்பது பின்னர் முடிவு செய்யப்படும். ஒருவேளை கருத்தொற்றுமை ஏற்பட்டால் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியமே மனுதாரராக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபிராங்கி மகாலி கூறுகையில், “இந்தத் தீர்ப்பைப் பற்றி ஏதும் கூற விரும்பவில்லை. அயோத்தியில் கடந்த 1992, டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி எவ்வாறு தியாகம் செய்யப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.

விதிமுறைகள் எவ்வாறு காற்றில் பறந்தன என்றும் அனைவருக்கும் தெரியும். யாராவது குற்றவாளியா அல்லது இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடிப் பேசி பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கும். இந்த மேல்முறையீடு மூலம் பலன் இருக்கிறதா இல்லையா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x