Published : 30 Sep 2020 03:27 PM
Last Updated : 30 Sep 2020 03:27 PM
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி லக்னோ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். ஜெய் ஸ்ரீராம் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார். அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது எனத் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் தான் உள்பட 31 பேர் விடுவிக்கப்பட்டது குறித்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியது. இந்தத் தீர்ப்பின் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது, முழு மனதுடன் வரவேற்று ஜெய் ஸ்ரீராம் என்று மந்திரத்தை உச்சரித்தோம்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்னுடைய மற்றும் பாஜக கட்சியின் நம்பிக்கைகளையும், ராம ஜென்மபூமி இயக்கத்தின் மீது நாங்கள் வைத்திருந்த தீவிரத் தன்மை, பிடிப்பையும் காட்டுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுத் தீர்ப்பு என்னுடைய நீண்டகாலக் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது. அதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆதலால், நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.
அயோத்தி இயக்கத்துக்கு ஆதரவையும் வலிமையையும் அளித்து எதிர்பார்ப்பின்றி தியாகங்களைச் செய்த என்னுடைய கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள், சாதுக்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்” என அத்வானி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி தீர்ப்பை வாசிக்கும்போது காணொலியில் ஆஜரான அத்வானி, தீர்ப்பின் விவரங்களை தனது மகள் பிரதிபா அத்வானியுடன் சேர்ந்து கேட்டார். தீர்ப்பு அளிக்கப்பட்டபின் தனது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களுக்கும், ஊடகத்தினருக்கும் அத்வானி வாழ்த்துகளைத் தெரிவித்து, ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரித்துச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT