Published : 30 Sep 2015 06:48 PM
Last Updated : 30 Sep 2015 06:48 PM
பிஹாரின் மாவோயிஸ்டுகள் நடவடிக்கைகளால் அம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இங்கு தம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்காக மொத்தம் 20 கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தது.
அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து இன்று நாடு திரும்பியுள்ள மோடி, அடுத்து பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர், கடந்த மக்களவை தேர்தலில் தொடர்ந்து கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதை தொடர்ந்து நடந்த சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்காகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மோடிக்கு பிஹாரில் மாவோயிஸ்டு பிரச்சனைகளால் அது முடியாமல் போய் இருக்கிறது.
இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்புப் பாதுகாப்பு படையினரால் பிரதமரின் பிரச்சாரக் கூட்டங்களை பிஹாரில் குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
பிஹாரில் வரும் அக்டோபர் 12-ல் துவங்கு நவம்பர் 5 ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், தேஜமு சுமார் 700 பிரச்சாரக் கூட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளது. இதில், மோடியின் முதல் கூட்டம் அக்டோபர் 2-ல் வரும் காந்தி ஜெயந்தி அன்று பாங்காவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ல் லக்கிசராயிலும், அடுத்த மூன்றாவது நாளில் முங்கேரிலும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி. இம் மாநிலத்தின் முசாபர்பூர், கயா,
சஹர்சா மற்றும் பாகல்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி இருந்தார்.
கடந்த 2013-ல் மக்களவை தேர்தலின் போது மோடி பிஹாரின் தலைநகரான பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT