Last Updated : 30 Sep, 2020 10:50 AM

 

Published : 30 Sep 2020 10:50 AM
Last Updated : 30 Sep 2020 10:50 AM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமாபாரதி, மனோகர் ஜோஷி நீதிமன்றத்தில் ஆஜராக வாயப்பில்லை

முரளி மனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி: கோப்புப்படம்

லக்னோ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இறுதியாக, அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராயினர். இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்க உள்ளார். 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்ததால், அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா பாரதிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், அவர் இன்று ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது.

இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே ஆகியோர் லக்னோவுக்கு நேற்று வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x