Last Updated : 30 Sep, 2020 08:43 AM

 

Published : 30 Sep 2020 08:43 AM
Last Updated : 30 Sep 2020 08:43 AM

ஆகஸ்ட் மாதத்துக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட 15 பேரில் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஐசிஎம்ஆர் 2-வது செரோ சர்வேயில் தகவல்

புதுடெல்லி

நாட்டில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 பேரில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மக்கள்தொகையில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வில் (செரோ சர்வே) தெரியவந்துள்ளது.

தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு (செரோ சர்வே) முதல் கட்டம் மே மாதம் வரை எடுக்கப்பட்டு கடந்த மாதம் ஐசிஎம்ஆர் வெளியிட்டது. அதில் மே மாதம்வரை இந்தியாவில் 64 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது.

ஆனால், நேற்று வெளியிட்ட 2-வது கட்ட செரோ சர்வே ஆய்வில் எந்த எண்ணிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் மாதம் வரை முதல் கட்ட செரோ சர்வேயில் பாதிக்கப்பட்ட அளவிலிருந்து 10 மடங்கு பாதிப்பு இருக்கலாம். அதாவது 6.4 கோடி பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தேசிய அளவிலான 2-வது செரோ சர்வே கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 22-ம் தேதிவரை நடத்தப்பட்டது. முதல் செரோ சர்வே நடந்த அதே 21 மாநிலங்கள், 70 மாவட்டங்களில் உள்ள 700 கிராமங்கள், வார்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் வெவ்வேறு வீடுகளில், வெவ்வேறு நபர்களிடம் நடத்தப்பட்டது.

இதில் 29,082 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 10 வயதுக்கு மேற்பட்டோரில் 6.6 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வயதுவந்தோர் மக்கள்தொகையில் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோரில் 7.1 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

லாக்டவுன், தனிமைப்படுத்தப்படுதல் போன்றவை மூலம் கரோனா வைரஸ் பரவல் குறிப்பிட்ட அளவு தடுக்கப்பட்டிருந்தாலும், மக்கள்தொகையில் இன்னும் குறிப்பிடத்தகுந்த அளவு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள குடிசைவாழ் பகுதி, நகர்ப்புறங்களோடு ஒப்பிடுகையில் கரோனா தொற்றுக்கான இடர்கள் இருமடங்காகவும், கிராமப்புறங்களோடு ஒப்பிடுகையில் 4 மடங்காகவும் இருக்கிறது. கிராமப்புறங்களில் 4.4 சதவீதம் தொற்று இருக்கும் பட்சத்தில், நகர்ப்புறங்களில் 8.2 சதவீதமும், நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் 15.6 சதவீதமாகவும் இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்துக்குள் 10 வயதுக்கு மேற்பட்டோரில் 15 பேரில் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். முதல்கட்ட செரோ சர்வேயில் 18 வயதுக்குக் கீழ் உள்ள வயதினர் அதிகமாக கரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

ஆனால், 2-வது செரோ சர்வேயில் 18 வயதுக்குக் கீழ் உள்ள வயதினரும் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வயதுப் பிரிவினை, பாலினம் வேறுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் செரோ சர்வேயில் ஆய்வு செய்யப்பட்ட மக்கள்தொகையில் 0.73 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவந்தது.

மே மாதம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 130 பேரில் 81 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்த நிலையில், ஆகஸ்ட் மாத்தில் 32 பேரில் 26 பேருக்கு மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் தீவிரமான பரிசோதனை, சிகிச்சை முறை போன்றவற்றால் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

அதேசமயம், மக்கள் தொகையில் மிகப்பெரிய அளவில் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆதலால் 5டி முறையான டெஸ்ட், ட்ரேஸிங், ட்ராக், ட்ரீட்மென்ட் (சிகிச்சை), டெக்னாலஜி (தொழில்நுட்பம்) ஆகியவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

டெல்லி, மும்பை, அகமதாபாத், புதுச்சேரி ஆகிய நகரங்களில் “செரோபிரிவேலன்ஸ்” (நோய்த்தொற்று தனிநபர் விகிதப் பரவல்) முதல் கட்டமாக ஜூன் 27 முதல் ஜூலை 10-ம் தேதிவரை நடத்தப்பட்டது. இதில் 21,387 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 23.5 சதவீதம் செரோபிரிவேலன்ஸ் கண்டறியப்பட்டது.

2-வது கட்ட செரோபிரிவேலன்ஸ் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை 15 ஆயிரம் மாதிரிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் 29.1 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் செரோபிரிவேலன்ஸ் என்பது 28,503 மாதிரிகளில் 9.3 சதவீதமாகவும், ஸ்பெயினில் 4.3 சதவீதம், பிரிட்டனில் 6.9 சதவீதமாகவும் இருக்கிறது. ஈரானில் 22 சதவீதம் இருக்கலாம்''.

இவ்வாறு பார்கவா தெரிவித்தார்

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், “சமூக விலகல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றில் எந்தவிதமான தளர்வும் காட்டக்கூடாது. குறிப்பாக அடுத்துவரும் பண்டிகைக் காலங்களான நவராத்திரி பண்டிகை, சாத் பண்டிகை, திபாவளி, ஈத்முபாரக் ஆகியவற்றில் மக்கள் சமூக விலகலையும், முகக்கவசத்தையும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

2-வது கரோனா அலை உலகில் பல நாடுகளில் வந்துவிட்டது. இந்தியாவில் டெல்லி, கேரளா, பஞ்சாப்பில் கூட 2-வது கரோனா அலை வந்துள்ளது. ஆதலால், முகக்கவசம், சமூக விலகலை மக்கள் தீவரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x