Published : 30 Sep 2020 08:26 AM
Last Updated : 30 Sep 2020 08:26 AM
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம் அலகாபாத்தில் அகில இந்திய சாதுக்கள் சபை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கூடியது. இதில், 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அயோத்தியை போல்காசி, மதுராவில் உள்ள மசூதிகளை முஸ்லிம்கள் தாமாக முன்வந்து இந்துக்களுக்கு விட்டுத்தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் மதுராவில் அக்டோபர் 15-ல் கூடுகின்றனர்.
அகில இந்திய சாதுக்கள் சபை சார்பில் அதன் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில்மதுரா நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தாங்களும் ஒரு மனுதாரர் ஆகலாமா? அல்லது அதற்கு முன் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாமா? எனவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால், ‘காசி-மதுரா விடுதலை’ பிரச்சினை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது.
இதனிடையே மதுராவை முற்றுகையிட்டு கிருஷ்ண ஜென்மபூமி கோயில் நிலத்தில் உள்ள ஈத்கா மசூதியை முற்றிலும் விடுவிக்கப் போவதாக ‘இந்து ஆர்மி’ எனும் புதிய அமைப்பு சார்பில் கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மதுரா முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இந்த அமைப்பைச் சேர்ந்த 22 பேரை உ.பி. போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அகில இந்திய தீர்த்த புரோஹித் மஹா சபையின் தேசிய தலைவர் மஹேஷ் பாதக் கூறும்போது, “சுதந்திரத்திற்கு பின் மதுராவின் இந்து-முஸ்லிம் சமூகத்தினர் இடையே, கோயிலும் மசூதியும் ஒட்டியபடி இணக்கமாகத் தொடர வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் பிறகு இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும் அரசியல் காரணங்களுக்காக வெளியாட்கள் சிலர் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.
இவர் கூறும் ஒப்பந்தமானது, மதுரா கோயிலின் கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தா மற்றும் மசூதியின் ஷாஹி ஈத்கா நிர்வாக கமிட்டி இடையே கடந்த 1968-ல் போடப்பட்டது. மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் இந்த ஒப்பந்தம் கடந்த 1973, ஜூலை 20-ல் ஏற்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. இ்ந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மசூதி அமைந்துள்ள நிலத்தை கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி மதுரா நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT