Published : 29 Sep 2020 04:24 PM
Last Updated : 29 Sep 2020 04:24 PM
‘புதிய அடக்குமுறை வேளாண் சட்டங்களுக்கு’ எதிராக விவசாயிகள் போராட அனைத்து சட்ட உதவிகள் மட்டுமல்லாது அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.
பஞ்சாப் அரசு இந்த ‘இருண்ட மற்றும் கடினமான காலங்களில் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிக்கும்’ என்று உறுதியளித்தார்.
31 விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று நடந்த கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர், தான் இது தொடர்பாக தன் சட்டக்குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார், அதாவது இந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் செய்வோம் என்று உறுதியளித்தார்.
விவசாயப் பிரதிநிதிகள் தவிர இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத்தும் கலந்து கொண்டார். இதோடு மாநில அமைச்சர்கள் சுக்ஜிந்தர் ரந்தவா, பாரத் பூஷன் அசஷு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர், “மாநில உரிமைகள் மீதான தாக்குதல், அரசியல் சாசன் உரிமைகளைப் பறித்தல் ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து சாத்திய நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் விவசாயிகள் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக மாநில சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று சட்ட ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினால், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மத்திய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவெடுப்போம்.
இந்தச் சூழ்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தில்தான் தீர்வு கிடைக்கும் என்றால் அதை கூட்டுவதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.
மத்திய அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்ற உரிமை கிடையாது ஏனெனில் இது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.
மத்திய அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய முயற்சி செய்வோம்.
அனைத்து முனைகளிலும் போராட்டம் நடக்கும். அனைத்து பஞ்சாயத்துகளிலும் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கும் அனுப்புவோம்.
விவசாய மசோதாக்களை கொண்டு வரும் முன்பாக மூன்று முறை பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். வேண்டாம் என்று வலியுறுத்தினேன். இது நாடு முழுதும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றேன், ஆனால் எந்த ஒரு பதிலும் அவர் அளிக்கவில்லை.
மத்திய அரசை இனி விவசாயிகளைக் காக்க நம்ப முடியாது. 8 மாதங்களாக ஜிஎஸ்டி இழப்பீடு பஞ்சாபுக்கு அளிக்கப்படவில்லை” இவ்வாறு கூறினார் அமரீந்தர் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT