Published : 28 Sep 2020 08:10 PM
Last Updated : 28 Sep 2020 08:10 PM
புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும், பல மொழிகளில் பாடக்கூடிய திறன்படைத்தவருமான மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக 50 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த இரு நாட்களுக்கு முன் காலமானார். கரோனாவிலிருந்து குணமடைந்தாலும் தொடர்ந்து எஸ்பிபியின் உடல் உறுப்புகள் இயக்கம் மோசமடைந்ததால், வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்குத் தமிழக அரசின் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:
''மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அவரின் மறைவு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச இசை உலகத்தைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்தியுள்ளது.
எஸ்பிபியின் மகத்தான புகழ் மற்றும் அவரின் 50 ஆண்டுகால வாழ்க்கையில் இசைத் துறையில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்கள் தொடர்ந்து புகழாஞ்சலி செலுத்துவதன் மூலம் அளவிட முடியும்.
இசையையும் தாண்டி எஸ்பிபி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். எஸ்பிபி அவரின் தாய்மொழியான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஏறக்குறைய 6 முறை தேசிய விருதுகளை எஸ்பிபி வென்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதுகளை 25 முறை எஸ்பிபி பெற்றுள்ளார். கடந்த 2001-ல் பத்மஸ்ரீ விருதையும், 2011-ல் பத்ம விபூஷண் விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
இசை உலகின் ஜாம்பவான்களான லதா மங்கேஷ்கர், பூபேன் ஹசாரிகா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பிம்சென் ஜோஷி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அரசு பெருமைப்படுத்தி உள்ளதை நான் இங்கு நினைவுகூர்கிறேன்.
இசை மற்றும் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த மிகப்பெரிய பாடகருக்கு புகழாஞ்சலி செலுத்த, எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வேண்டிக்கொள்கிறேன். எஸ்பிபியின் 50 ஆண்டுகால இசைப் பணிக்கும், நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவும், இந்த உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்''.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT