Last Updated : 28 Sep, 2020 06:55 PM

20  

Published : 28 Sep 2020 06:55 PM
Last Updated : 28 Sep 2020 06:55 PM

'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன்': பாஜக தேசியச் செயலாளரின் சர்ச்சைப் பேச்சுக்குக் கண்டனம்; போலீஸில் புகார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கோப்புப் படம்.

சிலிகுரி

கரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன். அப்போதுதான் கரோனாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனைகள் அவரால் புரிந்துகொள்ள முடியும் என்று பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா தெரிவித்துள்ளார்.

பாஜக சமீபத்தில் அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. இந்நிலையில் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சிலிகுரி காவல்துறையிடம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் நேற்று பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய தொண்டர்கள் கரோனாவை விட மிகப்பெரிய எதிரியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அவர்கள் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.

பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா, மம்தா பானர்ஜி.

நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால், நேராக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக்கொள்வேன். மாநிலத்தில் கரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பரிதாபத்துகுரிய வகையில் நடக்கிறது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை மம்தா மோசமாக நடத்துகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மகன், மகள் பார்க்கக் கூட அனுமதியில்லை. நாய், பூனையைக் கூட இவ்வாறு நாம் நடத்தியதில்லை” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசிய அனுபம் ஹஸ்ரா குறித்து சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதோ ராய் கூறுகையில், “பாஜக தலைவர்கள் வாயிலிருந்துதான் இதுபோன்ற தரமில்லாத வார்த்தைகள் வரும். இதுதான் கட்சியின் மனநிலை. இதுபோன்ற கருத்துகளை திரிணமூல் காங்கிரஸ் கண்டிக்கிறது.

ஹஸ்ராவுக்கு எதிராக போலீஸில் புகார் அளி்க்கப்பட்டுள்ளது. விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவி்த்தார்.

சிலிகுரியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், ஹஸ்ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

சிலிகுரி போலீஸில் புகார் அளித்தது தொடர்பாக அனுபம் ஹஸ்ராவிடம் கேட்டபோது, “மம்தா பானர்ஜி பல முறை பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நான் கூறிய கருத்துகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டால், மம்தா கூட தவறாகப் பல முறை பிரதமர் மோடியைப் பற்றிப் பேசியுள்ளார்.

என் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது 10 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x