Published : 28 Sep 2020 05:17 PM
Last Updated : 28 Sep 2020 05:17 PM
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி தகுதியானதா எனக் கோரி கேரளா காங்கிரஸ் எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் திருச்சூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி.என். பிரதாபன் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனு குறித்து அவரின் வழக்கறிஞர் ஜேம்ஸ் பி.தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
“வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள பிரிவு 14-ல் உள்ள சமத்துவ உரிமை, பிரிவு 15-ல் உள்ள பிரிவினையை ஏற்படுத்துதலுக்கு எதிரானது. பிரிவு 21-ல் சுதந்திரமாக வாழுதல், வாழும் உரிமை ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது.
இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, சட்டவிரோதம், தவிர்க்கப்பட வேண்டியது.
இந்திய வேளாண்மை என்பது சிறு சிறு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் விவசாயம் பெரும்பாலும் பருவமழை, காலநிலை சார்ந்து இருக்கிறது.
உற்பத்தியில் உறுதியற்ற தன்மையும், நிச்சயமற்ற சந்தைச் சூழலையும் கொண்டிருக்கிறது. இது வேளாண்மையின் உள்ளீடு மற்றும் சந்தைப்படுத்துதலில் இடர்ப்பாடுகள் உடையதாக இருக்கிறது.
விவசாயிகள் காலநிலையை, பருவமழையை அதிகமாக சார்ந்திருப்பதால் பல்வேறு சவால்களையும் சந்திக்கிறார்கள். வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தி மட்டும் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க முடியாது.
அதற்குப் பதிலாக வேளாண் உற்பத்தி சந்தை குழு (ஏபிஎம்சி) முறையை வலிமைப்படுத்தி, அதிகமான முதலீடு, திறமையான நிர்வாகத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிக்க வேண்டும்.
2015-16 ஆம் ஆண்டு வேளாண் கணக்கின்படி, பிரதமர் கிஷான் திட்டத்தில் விவசாயத்துக்குப் பயன்படும் நிலத்தை 14.5 கோடி விவசாயிகள் வைத்துள்ளார்கள்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 14.5 கோடி மக்களுக்குத் தீவிரமான பொருளாதார இழப்பும், குடும்பத்தினருக்குப் பாதிப்பும் ஏற்படும் முன் இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டம், வேளாண் சட்டத்தின் பிரிவுகள் 2,3,4,5,6,7,13,14,18 மற்றும் 19 ஆகியவற்றுக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT