Last Updated : 28 Sep, 2020 04:25 PM

 

Published : 28 Sep 2020 04:25 PM
Last Updated : 28 Sep 2020 04:25 PM

யூபிஎஸ்சி தேர்வை தள்ளிவைக்கக் கோரும் வழக்கு: யூபிஎஸ்சி ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

அக்டோபர் 4-ம் தேதி நாடுமுழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கும் யூபிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நாளைக்குள் பதில் அளிக்கக் கோரி யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூபிஎஸ்சி தேர்வை நடத்த என்னமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வசீர்ரெட்டி கோவர்த்தனா சாய் பிரகாஷ் மற்றும் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் 20-க்கும் மேற்பட்டவர்களும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்து தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரியிருந்தனர்.

அந்த மனுவில் “ இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் ஆபத்தான இந்நேரத்தில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது கரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, உயிரிழக்கவும் ஆபத்தும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்களான மழை, நிலச்சரிவு, வெள்ளம், தொடர் மழை போன்றவையும் நிகழ்கின்றன. இவை மனுதாரர் மட்டுமல்லாமல் தேர்வெழுதும் பலரின் உயிரையும், உடல்நலத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

தாங்கள் வாழும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தால் தேர்வு எழுதும் பலரும் பாதுகாப்பில்லாத சுகாதாரச் சூழலால் பல்வேறு கற்பனை செய்ய முடியாத கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். வேறு வழியின்றி ஹோட்டல், விடுதிகள், போன்றவற்றில் குடும்பத்தினருடன் தங்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

தேர்வு மையங்களையும் யூபிஎஸ்சி நிர்வாகம் அதிகரிக்காததால், தேர்வு எழுதுவோர் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை பயணித்து வந்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். ஆதலால், வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும்'' எனத் தெரிவி்த்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வை தள்ளி வைக்கக் கோரியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “ யூபிஎஸ்சி தேர்வுகளை மே 31-ம் தேதி நடத்தவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த சமயம், பல்வேறு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசின் பணிக்காக நடத்தப்படும் தேர்வாகும். தேர்வு எழுதும் ஏராளமானோர் ஏற்கெனவே தேர்வு நுழைவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். இனிமேல் ஒத்திவைக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு யூபிஎஸ்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கூறுகையில், “ யூபிஎஸ்சி தேர்வை நடத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள், போக்குவரத்து வசதிகள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யுங்கள்.

உங்கள் பிரமாணப்பத்திரத்தின் நகலை மனுதாரர் வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்தவா மற்றும் 19 மனுதாரருக்கும் வழங்குங்கள். இந்த வழக்கை நாங்கள் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x