Published : 28 Sep 2020 01:36 PM
Last Updated : 28 Sep 2020 01:36 PM
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரு தூண்களாக இருந்த சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகள் வெளியேறிவி்ட்ட நிலையில், இனி யார் இருக்கிறார்கள் என்று வியப்புடன் சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார்.
இந்த மசோதாக்களுக்குத் தொடர்ந்து நாடு முழுவதும் விவசாயிகள் தரப்பில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டன.
ஆனால், அனைத்தையும் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் இந்த 3 மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நேற்று ஒப்புதல் அளித்துவிட்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன் மணி அகாலி தளம் கட்சி நேற்று அறிவித்தது. பாஜக கூட்டணியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இருந்துவரும் அகாலி தளம் வேளாண் பிரச்சினையால் விலகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து கடந்த இரு ஆண்டுகளுக்குள் 3 முக்கியக் கட்சிகள் விலகியுள்ளன. ஏற்கெனவே தெலுங்குதேசம் கட்சி, சிவசேனா கட்சி ஆகியவை விலகிவிட்ட நிலையில், தற்போது 3-வது கட்சியாக சிரோன்மணி அகாலி தளம் விலகியுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்பதால் தெலங்குதேசம் கட்சி என்டிஏ கூட்டணியிலிருந்து விலகியது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம், முதல்வர் பதவியைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு போன்றவற்றால் பாஜக, சிவசேனா இடையே பெரும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் சிவசேனா கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடைசித் தூணாக இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வெளியேறிவிட்டது. அகாலி தளம் வெளியேற முயன்றபோது, அதைத் தடுக்க கூட்டணி சார்பில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை.
ஏற்கெனவே சிவசேனா கட்சியும் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் இரு முக்கியத் தூண்கள் வெளியேறிவிட்டன. இனிமேல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வெளியேற வேண்டும், யார் இருக்கிறாகள்? தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள், இந்துத்துவா கொள்கைக்காக எதையாவது செய்திருக்கிறார்களா?
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள்தான் துணிச்சலையும் வீரத்தையும், ஆண்மையையும் பிரதிநிதித்துவப்படுத்தின. அகாலி தளம், சிவசேனா கட்சிகள்தான் ஆண்மையின் முகங்கள்.
தற்போது சிலர், ராம் ராம் என்று சொல்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளிேயறுவதற்கு எந்த ராமரும் இல்லை. இரு சிங்கங்களான அகாலி தளம், சிவசேனாவைக் கூட்டணி இழந்துவிட்டது.
முதலில் என்டிஏ கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது, இப்போது அகாலி தளம் வெளியேறிவிட்டது. இரு தூண்கள் சென்றுவிட்டபின்பும் என்டிஏ கூட்டணி இருக்கிறதா?
காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க தேசிய அளவில் உருவாக்கப்பட்டதே தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்தக் கூட்டணி பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கடந்த காலங்களில் பார்த்துள்ளது. பல கட்சிகள் வந்துள்ளன. பல கட்சிகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டுச் சென்றுள்ளன.
நாட்டின் அரசியல் என்பது ஒரு கட்சி அரசியலை நோக்கித் தள்ளப்படுகிறது. ஆனால், பாஜக பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலைச் சந்தித்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன. நிச்சயம் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வோம்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT