Published : 27 Sep 2020 02:25 PM
Last Updated : 27 Sep 2020 02:25 PM
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுமான தினேஷ் குண்டுராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஏற்கெனவே முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஆகியோர் கரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், கர்நாடக அமைச்சரவையிலும் பல அமைச்சர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் அதிகமாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வரும் மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 8,811 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் மட்டும் 4,016 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.6 லட்சத்தைக் கடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 72 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் உயிரிழந்ததையடுத்து, இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,600க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். நான் அறிகுறியில்லாத கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் விரைவாக குணமடைய அனைவரின் வாழ்த்துகளையும் எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம், கோவா, புதுச்சேரி மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT