Published : 27 Sep 2020 08:03 AM
Last Updated : 27 Sep 2020 08:03 AM
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவந்த, நீண்டகால நட்புக் கட்சியான சிரோன்மணி அகாலி தளம் விலகுவதாக நேற்று அறிவித்தது.
கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோன்மணி அகாலிதளம் அங்கம் வகித்து வருகிறது. அகாலி தளம் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், பாஜகவும், அகாலி தளமும் நகமும் சதையும் போல என்று புகழாரம் சூட்டியிருந்தார். இதன்படிதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் பாஜக -அகாலி தளம் கூட்டணி அமைத்துச் சந்தித்தன.
ஆனால், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது பாஜக கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகியுள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து ஏற்கெனவே தெலுங்குதேசம் கட்சி, சிவசேனா கட்சி ஆகியவை விலகிவிட்ட நிலையில், தற்போது 3-வது கட்சியாக சிரோன்மணி அகாலி தளம் விலகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 3 முக்கியக் கட்சிகள் பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளன.
மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விவசாயிகள், விவசாயச் சங்கங்கள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ரயில் மறியல் போராட்டமும், பாரத் பந்த் போராட்டமும் நடத்தினர்.
ஆனால், இந்த மசோதாக்களைச் சட்டமாக்குவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
இதையடுத்து, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று மாலை கூடி, வேளாண் மசோதா குறித்து ஆலோசித்தது. அந்த ஆலோசனையின் முடிவில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றுவதில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பிடிவாதகமாக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தனர். இறுதியாக கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் நிருபர்களிடம் கூறியதாவது:
“மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு பஞ்சாப்பிலும் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மசோதாக்கள் விவசாயிகளை அழித்துவிடும்.
மத்திய அரசின் நிலைப்பாடு, பிடிவாதம், விவசாயிகளின் போராட்டம் ஆகியவை குறித்து அகாலி தளம் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று கூடி ஆலோசித்தது. அதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலருந்து அகாலி தளம் விலக முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு இறுதிவரை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை, மதிக்கவில்லை. பஞ்சாப் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என விரும்பினோம். ஆனால், நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக இந்த மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாக்கள் பஞ்சாப்புக்கு எதிரானவை. நாட்டின் விவசாயிகளுக்கு எதிரானவை. ஆதலால், இனிமேலும் பாஜக கூட்டணியில் நீடிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோாதாவில் பஞ்சாபி மொழியையும் சேர்க்கக் கோரினோம். அதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பிலும் ஆலோசித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறோம். ஏற்கெனவே மத்திய அரசிலிருந்து விலகிவிட்டோம்’’.
இவ்வாறு சுக்பிர் சிங் பாதல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT