Published : 26 Sep 2020 02:19 PM
Last Updated : 26 Sep 2020 02:19 PM

அசாமில் 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் நேரு கொள்கைகள் நீக்கம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அசாமில் 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் நேரு கொள்கைகள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநிலக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாகக் கல்வி ஆண்டில் உரிய நேரத்தில் பள்ளிகளைத் திறக்க முடியாத காரணத்தால் அசாமில், 12-ம் வகுப்புப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. அசாம் உயர்நிலைக் கல்விக்குழு 30 சதவீதப் பாடத் திட்டங்களை நீக்கி மாணவர்களின் சுமையைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேருவின் கொள்கைகள், அயோத்திப் பிரச்சினை, குஜராத் கலவரங்கள் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசியல் விஞ்ஞானப் பாடத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தேசக்கட்டுமானம் பற்றிய அணுகுமுறை குறித்த பாடம், அயலுறவுக் கொள்கை, நேருவுக்குப் பிறகான ஆட்சி பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டன. அதேபோல் பஞ்சாப் நெருக்கடி, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், அயோத்திப் பிரச்சினை, குஜராத் கலவரம், வறட்சி உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு அசாம் மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தெபாப்ரதா சாய்க்கியா, முதல்வர் சர்பானந்த சொனோவாலுக்குக் கடிதம் எழுதியுள்ளளார்.

அதில், ''மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கக் கல்வித்துறை மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. ஆனால், அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள், அதன் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

எந்த ஒரு நடுநிலையான நபரும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் நேரு என்பதை மறுக்கமாட்டார். அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ராஜ்நாத் சிங் இருவருமே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தேசத்தைக் கட்டமைப்பதில் நேருவின் பங்களிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜவஹர்லால் நேருவின் பிம்பத்தைச் சிதைக்கும் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பர். அசாம் கல்விக் குழுவின் நடவடிக்கைக்குப் பின்னும் ஏதோ காரணம் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்.

எனவே பாடத் திட்டத்தில் வேறு பாடங்களை நீக்கி, மீண்டும் ஜவஹர்லால் நேரு குறித்த பாடங்களைச் சேர்த்து, சந்தேகத்தைப் போக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x