Published : 26 Sep 2020 12:02 PM
Last Updated : 26 Sep 2020 12:02 PM
லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி(ஆர்எல்எஸ்பி), மீண்டும் பாஜக கூட்டணியில் சேரத் திட்டமிடுகிறது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மெகா கூட்டணியின் தலீத் கட்சியான ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா வெளியேறியது. இதன் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மாஞ்சி, தன் கட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில்(தேஜமு) இணைந்தார்.
இதில், மேலும் விரிசலாக மெகா கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான ஆர்எல்எஸ்பியும் வெளியேற முடிவு செய்துள்ளது. இதற்கு லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத்தை காரணமாக்கி உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆர்எல்எஸ்பியின் நிர்வாகிகள் கூறும்போது, ‘மெகா கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வீ பிரசாத் யாதவ் தன்னிச்சையாக முன்னிறுத்தப்படுகிறார்.
இதற்கு, எங்களுக்கு ஒப்புதல் இல்லை. எனவே, மீண்டும் பாஜக கூட்டணியில் சேரப் பேச்சுவார்த்தைகளும் முடிந்து விட்டன.’ எனத் தெரிவித்தனர்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேஜமுவின் உறுப்பினராக இருந்தது ஆர்எல்எஸ்பி. இதில் மூன்று எம்.பிக்களை பெற்றதால் அதன் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா மத்திய அமைச்சரானார்.
பிறகு பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்தவர், தன் மத்திய அமைச்சர் பதவியை 2019 மக்களவை தேர்தலுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார்.
2019 மக்களவை தேர்தலில் லாலுவின் மெகா கூட்டணியில் சேர்ந்தார். இதில் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.
எனினும், அக்கூட்டணி பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்வதாக இருந்ததில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் குஷ்வாஹா தன்னை மெகா கூட்டணியின் முதல் அமைசர் வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.
இதனால், மெகா கூட்டணியில் தற்போது மிஞ்சியிருப்பது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் விகாஸ் இன்ஸான் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே.
இதனிடையே, பாஜக தலைமையிலான தேஜமுவில் தொகுதி பங்கீடு சிக்கல் தொடருகிறது. இதை சமாளிக்க பிஹாரின் 243 தொகுதிகளை பாஜக மற்றும் முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) சரிபாதியாக பிரித்துக் கொள்வது என முடிவானது.
இதில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு(எல்ஜேபி) பாஜகவும், ஜிதன்ராமின் கட்சிக்கு நிதிஷும் தமது பங்குகளில் பிரித்தளிப்பது என திட்டமிடப்பட்டு இருந்தது.
இனி ஆர்எல்எஸ்பியும் வருவதால் அதற்கு தொகுதிகளை பிரித்தளிப்பது யார்? எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலை விட பாதி குறைவாக தனக்கு 25 தொகுதிகளை பாஜக ஒதுக்கியதில் எல்ஜேபிக்கு ஒப்புதல் இல்லை.
எனவே, அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு தலைவரான சிராக் பாஸ்வான், 143 தொகுதிகளில் நிதிஷ் கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதாக மிரட்டி வருகிறார். கடந்த தேர்தலில் ஜேடியு 71, பாஜக 53, எல்ஜேபி 2, ஆர்ஜேடி 80, காங்கிரஸ் 27, சிபிஐஎம்எல் 3 மீதம் உள்ளவை சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT