Published : 26 Sep 2020 08:19 AM
Last Updated : 26 Sep 2020 08:19 AM
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரேதச மாநில விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு எதிராக இருப் பதாகக் கூறி, விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாபில் நேற்று முன்தினம் விவசாய அமைப்பினர் முழுஅடைப்பு போரட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்களும், வணிகர்களும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. சாலை மறியல் போராட்டம் நடத்தி, அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் ரயில் தண்டவாளங்களில் நின்று ரயில் மறியல் போராட்டத்தையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து பல போராட்டக்காரர்கள் வருகை புரிவதால், அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபைப் போலவேஹரியாணாவிலும் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். மேலும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும், மத்தியபிரதேசம், பிஹார், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக பஞ்சாபில் மட்டுமே 31 விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று நடைபெற்றது. இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் டிராக்டரை ஓட்டி போராட்டத்தில் கலந்துகொண்டார். டிராக்டரின் கூரை மீது அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் அமர்ந்திருந்தார். அவர்களின் டிராக்டரைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் நடந்தும், டிராக்டர்களிலும் பின்தொடர்ந்தனர்.
கர்நாடகாவில் மாநில விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கர்நாடகா-தமிழ்நாடு நெடுஞ்சாலையிலுள்ள பொம்மனஹள்ளி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூரு மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் 250 விவசாயிகள் போராட்டம் நடத்த வந்தபோது அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT