Last Updated : 25 Sep, 2020 12:17 PM

 

Published : 25 Sep 2020 12:17 PM
Last Updated : 25 Sep 2020 12:17 PM

என்னைப் பற்றிய தகவல்களை ஆர்டிஐ‍‍-யில் தரக்கூடாது: சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம்: விடுதலையை தடுக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு

பெங்களூரு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தன்னைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பதில் அளிக்கக் கூடாது என சசிகலா பெங்களூரு பரப்பன அகரஹார சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, சசிகலாவின் சிறைவாசம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சிறைத்துறையிடம் கேள்விகள் எழுப்பி வருகிறார்.

அண்மையில் சசிகலாவின் விடுதலைத் தேதி தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, "2021ம் ஆண்டு ஜனவரி 27ம் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது" என சிறை நிர்வாகம் பதிலளித்தது. இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நரசிம்ம மூர்த்தி, "ஓராண்டுக்கு சசிகலாவுக்கு எத்தனை விடுமுறை நாட்கள்? அதில் எத்தனை நாட்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார்?" என சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் மக்கள் தொடர்பு அதிகாரி லதா, நரசிம்ம மூர்த்திக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சசிகலா தன் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் மூலம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் சசிகலா, "நான் சிறையில் இருப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக நிறைய கேள்விகள் கேட்கப்படுவதாக அறிந்தேன். எனது சிறைவாசம், விடுதலை தேதி தொடர்பாக தொடர்ந்து கேட்கப்படுகிறது.

அவற்றில் பெரும்பாலானவை விளம்பரம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதன் மூலம் சட்டப்பூர்வமாக நான் விடுதலையாகி வெளியே வருவதை தடுக்க முயற்சிக்கிறார்கள். எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்னைப் பற்றிய தகவல்களை தரக் கூடாது.

கடந்த 2019ம் ஆண்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேதபிரகாஷ் ஆர்யாஸ் என்ற விசாரணை கைதி தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு வேதபிரகாஷ் ஆர்யாஸ் ஆட்சேபம் தெரிவித்ததால் திஹார் சிறை நிர்வாகம் மனுதாரருக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கைப் போலவே எனது விவகாரத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மூன்றாம் நபருக்கு என்னைப் பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது. இவ்வாறு தனிநபர் குறித்த தகவலை மறுக்க தகவல்அறியும் உரிமை சட்டம் 8 (1)-ல் இடமிருக்கிறது. மத்திய தகவல் ஆணையமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது’’என சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து சசிகலாவை விடுதலையாவதை தடுக்க சதி நடப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த கடிதம் எழுதப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x