Published : 25 Sep 2020 07:38 AM
Last Updated : 25 Sep 2020 07:38 AM
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான முரண் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென டெல்லி சென்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என சிறை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவர் விரைவில் விடுதலையாக இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். சிறைத்துறை விதிமுறைகளையும், அரசியல் வளையங்களையும் கடந்து சசிகலாவை விரைவில் வெளியே கொண்டு வருவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்நெருங்கும் நிலையில் சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் புதியமாற்றங்களை ஏற்படுத்தும்; அதிமுகவிலும், கூட்டணிகள் உருவாவதிலும் சசிகலாவின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்களே, ‘சசிகலா பலம் வாய்ந்த தலைவர்தான்’ என சொல்ல ஆரம்பித்துள்ளனர். ம.நடராஜன் குடும்பத்துக்கு நெருக்கமான வைகோ, ஜி.கே.வாசன் ஆகியோரும் சசிகலா தரப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டி.டி.வி தினகரன்,‘சிறையில் சசிகலாவின் உடல்நிலை சீராக இல்லை. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதாவதுஜனவரி மாதத்தில் அவர் வெளியேவந்தால் அரசியல் காய் நகர்த்தல்களைஎதிர்பார்த்த அளவுக்கு கச்சிதமாக நகர்த்த முடியாது. முன்கூட்டியே சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும். இதற்காக ரூ. 10 கோடி அபாரதம் செலுத்தும் முயற்சியிலும், சிறை விதிமுறைகளின்படி சலுகைகளை பெறவும், பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுத்தார்.
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் சிலர் ரகசியமாக கூடி, தேர்தலில் திமுகவை சமாளிக்க வேண்டும் என்பதற்காக சசிகலாவை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையறிந்த பாஜக மேலிடம் அதிமுகவையும் அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இணைப்புக்கான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் வேகமாக நடந்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷாவுக்கு நெருக்கமானோருடன் ..
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 20ம் தேதி காலை தனி விமானம் மூலம்திடீரென டெல்லி சென்றார். அமமுக மூத்த தலைவர்களுக்கே தெரியாமல் அரங்கேறிய இந்த ரகசிய பயணத்தில், இரட்டை இலை சின்ன வழக்கில் லஞ்சம்கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனுடன் கைதான மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் மட்டுமே உடன் சென்றனர்.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதும் டி.டி.வி. தினகரன், சசிகலாவின் விடுதலை குறித்தும்ற இரட்டை இலைவழக்கு குறித்தும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தச் சென்றதாக அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டி.டி.வி. தினகரன் பாஜக மேலிடத்துடன் முக்கியமான பேச்சுவார்த்தையை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டெல்லி பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் தொடர்பில் இருக்கின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவை சிறையிலே சென்று பார்த்துள்ளார். அதன்பிறகு சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா இரு முறை சசிகலாவை சந்தித்து பேசினார்.
பாஜக - சசிகலா இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக சென்ற வேளையில், பாஜக தரப்பில் வைக்கப்பட்ட சிலமுக்கியமான நிபந்தனைகளை சசிகலாஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இந்தஇடைப்பட்ட காலத்தில் சசிகலா தரப்புக்கு நெருக்கமான 1200க்கும் மேற்பட்டஇடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதனால் சசிகலா, பாஜக மீதுஅதிருப்தி அடைந்ததால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் டி.டி.வி. தினகரன் மீண்டும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்.
இதன் அடுத்தகட்டமாக டி.டி.வி.தின கரன் டெல்லி வந்து, ‘லீ மெரிடியன்’ நட்சத்திர விடுதியில் ரகசியமாக தங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரோனா சிகிச்சை முடிந்து வீட்டில்ஓய்வில் இருப்பதால் டி.டி.வி.தினகரனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால்பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி கிடைக்காததால் அவர்களையும் சந்திக்க முடியவில்லை.
இதனால் சற்று அதிருப்தி அடைந்த டி.டி.வி. தினகரனுக்கு நீண்ட முயற்சிக்கு பின், அமித் ஷா அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்க நேரம் கிடைத்தது. ஆனால் அவர்கள் டி.டி.வி.தினகரனை, ‘நீங்கள் விடுதியில் இருந்து வெளியே வர வேண்டாம். நாங்களே உங்களை வந்து சந்திக்கிறோம்' எனக் கூறி, விடுதி அறைக்கு தேடி வந்து பேசினர்.
மூத்தவர்களும் முக்குலத்தோரும்
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது டி.டி.வி. தினகரன், ‘‘அதிமுகவில் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர் உட்பட 10 அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த 18-ம் தேதி நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இன்னொருபுறம் தென் மாவட்டங்களில் செல்வாக்கான முக்குலத்தோர் சாதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கோபத்தில் உள்ளனர். முக்குலத்தோருக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த சாதியை சேர்ந்த சசிகலாவை மீண்டும் கட்சிக்கு கொண்டு வர வேண்டும் என பேசிவருகின்றனர். இதற்கு செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனவே அதிமுக – அமமுக இணைப்பு,தேர்தலை சந்திக்கும் முறை, முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியவை குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்பார்கள். ஆட்சியில் இல்லாவிடில் அவரது பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள்.
இந்த நேரத்தில் ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். எனவே அவரை பொதுச்செயலாளராக நியமித்தால் திமுகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும். வரும் தேர்தலுக்காக பெரிய கூட்டணியையும் அவரால் உருவாக்க முடியும். இதற்கு அதிமுக சம்மதித்தால் உடனடியாக கட்சியை இணைக்க தயாராக இருக்கிறோம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
இதற்கு அமித் ஷாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் நேர்மறையான பதிலை தந்துள்ளனர். மேலும் அமித் ஷாவுடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில், டி.டி.வி.தினகரனை பேச வைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் இன்னும் சில தினங்களில் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து, ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்’’ என விவரமாக தெரிவித்தனர்.
செயற்குழுவில் எதிரொலிக்கும்
அதிமுகவில் ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர், வழிகாட்டும் குழு அமைக்கும் விவகாரம் ஆகியவற்றில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே முரண் உச்சத்தை எட்டியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அவரை அனுசரித்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதனிடையே பாஜக மேலிடம் டெல்லியில் டி.டி.வி. தினகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் தனித்தனியாக நம்பகமான ஆட்கள் மூலம் தகவல் அனுப்பியுள்ளது. அது தொடர்பாக இருவர் எடுத்துள்ள முடிவுகள் வரும் 28ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிரொலிக்கும்’ என அதிமுக மூத்த நிர்வாகிகள் உறுதியாக சொல்கின்றனர்.
‘பாஜகவிடம் டி.டி.வி. சரண்’: பெங்களூரு புகழேந்தி தகவல்
அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
எல்லோரும் சசிகலாவின் பெயரை சொல்லத் தயங்கிய காலத்தில், நான் அவரை ‘சின்னம்மா’ என அழைத்தவன். அவருக்காக சொத்துக் குவிப்பு வழக்கில் உறுதிப்பணம் கட்டியதால் வருமான வரி சோதனைக்கு ஆளானவன். அமமுகவை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் கிளைத் தொடங்க நிறைய பயணங்களை மேற்கொண்டவன்.
சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். சசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை. டி.டி.வி. தினகரன் தன் ஆசைக்காக அமமுகவை தொடங்கினார்.
கட்சியை வளர்க்க எந்த வேலையும் செய்யாமல் ஒரு தனியார் கம்பெனியை போல, தன் இஷ்டத்துக்கு நடத்தினார். இப்போது தன் சொத்துகளை காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லி சென்று பாஜகவிடம் சரணடைந்து இருக்கிறார். சொத்துகளையும், பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள டி.டி.வி. தினகரன் என்ன சமரசம் வேண்டுமானாலும் செய்வார்.
ஆனால் அவரை நம்பிச் சென்ற 40-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை நட்டாற்றில் விட்டு விட்டார். அதிமுக மேலிடம் விரும்பினால் அவர்களோடு பேசி, அதிமுகவில் இணைக்க தயாராக இருக்கிறேன். சசிகலாவை சேர்ப்பது, பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவற்றை கட்சித் தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT