Published : 25 Sep 2020 06:40 AM
Last Updated : 25 Sep 2020 06:40 AM
கிழக்கு லடாக் பகுதியில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் சில பகுதிகளை கடந்த மே மாதம், சீன ராணுவம் ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இரு ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு இடையிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் மோல்டோவில் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. லெப்டினன்ட் அளவிலான பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார்.
முன்னதாக இந்த மாதம் 10-ம் தேதி மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர், எஸ்.ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யிக்கும் இடையிலான முடிவின்படி இந்த 6-வது பேச்சுவார்த்தை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ராணுவத் துருப்புக்களை விரைவாக வெளியேற்றுவது, பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லை மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்களை கடைபிடிப்பது, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
அப்போது கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இருந்த நிலையே தொடர வேண்டும் என சீனாவிடம் இந்தியத் தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தவறான புரிதல்களைத் தவிர்ப்பது மற்றும் கூடுதல் படைகளை எல்லைக்கு அனுப்புவதைத் தவிர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். துருப்புகள் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் விரைவாக வெளியேற வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சீனாவிடம் பாங்காங் டிசோ பகுதியில் மோதலுக்கு வழிவகுக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் சீன படைகள் முழுமையாக விலக வேண்டும். அத்துமீறிய இடங்களில் இருந்து சீனா முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT