Published : 25 Sep 2020 06:35 AM
Last Updated : 25 Sep 2020 06:35 AM

திருமலையில் ரூ.200 கோடி செலவில் கர்நாடக விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

திருமலையில் கர்நாடக விடுதி கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றனர். படம்: பிடிஐ

திருமலை

திருமலையில் கர்நாடக பக்தர்கள் தங்க ரூ.200 கோடியில் புதிய விடுதி கட்டப்பட உள்ளது. இதற்காக நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் தற்போது கரோனா பரவல் காரணமாக ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று முன் தினம் 5-ம் நாளன்று, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று முன் தினம் இரவு திருமலைக்கு சென்றார். நேற்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் ஏழுமலையானை தரிசித்தனர்.

முன்னதாக கோயிலின் முகப்பு கோபுரம் அருகே ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பாவை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் இரு மாநில முதல்வர்களும் சுவாமியை வழிபட்டனர். சுவாமியின் பட்டு வஸ்திரத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு முதல்வர் ஜெகன் காணிக்கையாக வழங்கி கவுரவித்தார். இரு மாநில முதல்வர்களும் கோயில் அருகே உள்ள நாத நீராஜன மண்டபத்துக்கு சென்று ‘சுந்தர காண்ட பாராயணம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதன் பின்னர், திருமலையில், ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ள கர்நாடக பக்தர்கள் விடுதிக்கு இரு மாநில முதல்வர்களும் அடிக்கல் நாட்டினர். 7.05 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இவ்விடுதியில் ஒரே நேரத்தில் 1,800 பக்தர்கள் தங்கும் விதத்தில் 252 சாதாரண அறைகளும், 32 சொகுசு அறைகளும், 12 டார்மிட்டரி அறைகளும், ஒரு திருமண மண்டபமும், பக்தர்கள் உணவு விடுதியும் கட்டப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x