Published : 24 Sep 2020 07:05 PM
Last Updated : 24 Sep 2020 07:05 PM
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு விதிக்கப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகின்றன. 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்று 57 லட்சத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், அதன் தாக்கத்தை அந்நாட்டில் குறைத்துக்கொண்டு, உலக நாடுகளைப் பாடாய்ப்படுத்துகிறது.
உலக அளவில் கரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள்தான் மிகவும் மோசமாகப் பாதி்க்கப்பட்டுள்ளன. அதிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் முதன்முதலாக கரோனா வைரஸ் நோயாளி கடந்த ஜனவரி 31-ம் தேதி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்திருந்த அந்த மருத்துவ மாணவிக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மாணவி குணமடைந்தார்.
அதன்பின் நாட்டில் மெல்ல மெல்ல கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மார்ச் 15-ம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 100 பேரை எட்டியது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மாதிரி ஊரடங்கை பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி அறிவித்தார். அடுத்த இரு நாட்களில், அதாவது மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை ஏப்ரல் 14-ம் தேதிவரை பிரதமர் மோடி அறிவித்தார்.
அப்போது இந்தியாவில் கரோனா வைரஸால் 606 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 10 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த ஊரடங்கு கொண்டுவரப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஏப்ரல் 6-ம் தேதி இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 பேரைக் கடந்தது. ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி, மேலும் 21 நாட்கள் லாக்டவுனை நீட்டிப்பதாகக் கூறி மே 3-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தார். அப்போது இந்தியாவில் 10 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஏப்ரல் 29-ம் தேதி இந்தியாவில் கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டது.
லாக்டவுன் கடுமையான விதிமுறைகளுடன் நீட்டிக்கப்பட்ட நிலையிலும், கரோனா வைரஸ் பரவல் குறையவில்லை. மே 7-ம் தேதி இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 50 ஆயிரத்தை எட்டியது.
மே17-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், கரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை என்பதால், லாக்டவுனை மே 31-ம் தேதிவரை நீட்டித்தது. அப்போது இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரமாக இருந்தது. சீனாவின் கரோனா பாதிப்பை இந்தியா முறியடித்தது.
மே 19-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது. ஜூன் 8-ம் தேதி அன்-லாக் முதல் கட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு, 2.50 லட்சத்தைக் கடந்திருந்தது. 7,200 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஜூன் 12-ம் தேதி, உலக அளவில் கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்துக்குச் சென்றது. ஜூன் 27-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது.
ஜூலை 6-ம் தேதி உலக அளவில் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நாடுகளில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடம் பிடித்தது. இந்தியாவில் 6.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஜூலை 17-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்தது. உயிரிழப்பு 25,600 ஆக அதிகரித்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கணக்கின்படி நாட்டில் ஜூன் மாதத்தில் மட்டும் 5 லட்சம் பேரும், ஜூலையில் 11 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 30-ம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூலை மாதம் அமெரிக்காவில் 77,299 பேர் பாதிக்கப்பட்டதுதான் உலக அளவில் மிக அதிகபட்சமாக இருந்தது. அதை இந்தியா முறியடித்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கரோனா வைரஸால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகதாாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 7-ம் தேதி உலக அளவில் மோசமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்தது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86 ஆயிரத்து 508 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தப் பாதிப்பு 57 லட்சத்து 32 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 91 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல பிரதமர் மோடி இந்தியாவில் ஊரடங்கை அறிவிக்கும்போது நாள்தோறும் 18,383 மாதிரிகள்தான் ஐசிஎம்ஆர் நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டன. ஆனால், கடந்த 6 மாதங்களில் 6,62,79,462 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 81.75 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி என்என்ஐ அமைப்பின் நோய்த்தடுப்பு வல்லுநர் சத்யஜித் ராத் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ இந்தியாவில் இன்னும் கரோனா வைரஸ் பரவிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். முதலில் பெருநகரங்களில் பரவலிய கரோனா வைரஸ் தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவத் தொடங்கியுள்ளது, வேகமும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரும், தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநரான லட்சுமி நாராயண் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், ''இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதை மறுக்க முடியாது. பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளது,
சிகிச்சையை மேம்படுத்தியுள்ளது. ஆனாலும், பாதிப்பு குறையவில்லை. இந்த பாதிப்பு அடுத்த சில மாதங்களில் குறைந்துவிடும் எனக் கூற முடியாது. தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளது'' எனத் தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT