Published : 24 Sep 2020 04:24 PM
Last Updated : 24 Sep 2020 04:24 PM
கரோனா வைரஸ் பரவல், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசும், யூபிஎஸ்சி தேர்வாணையமும் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசீர்ரெட்டி கோவர்த்தனா சாய் பிரகாஷ் மற்றும் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் 20-க்கும் மேற்பட்டவர்களும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்து தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரியுள்ளனர்.
இதில் வசீர்ரெட்டி கோவர்த்தனா சாய் பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
“திருத்தப்பட்ட அட்டவணையின்படி யூபிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது என்பது மனுதாரரின் உரிமைகளை மீறுவதாகும். 7 மணி நேரம் நடக்கும் தேர்வில் நாடு முழுவதும் 72 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் ஆபத்தான இந்நேரத்தில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது கரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, உயிரிழக்கவும் ஆபத்தும் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்களான மழை, நிலச்சரிவு, வெள்ளம், தொடர் மழை போன்றவையும் நிகழ்கின்றன. இவை மனுதாரர் மட்டுமல்லாமல் தேர்வெழுதும் பலரின் உயிரையும், உடல்நலத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
யூபிஎஸ்சி தேர்வை மாற்றி வைத்து அட்டவணை வெளியிட்டது தன்னிச்சையானது , காரணமில்லாதது, விநோதமானது. மனுதாரரின் உடல்நலம் மற்றும் வாழ்வாதார உரிமைகளை மீறுவதாகும் .
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது அரசுப் பணிக்கான தேர்வாகும். கல்விரீதியான தேர்விலிருந்து வேறுபட்டது. தேர்வு தாமதமானதற்கும் எந்தவிதமான கேள்வியும் வரப்போவதில்லை. எந்தக் கல்வியாண்டிலும் பாதிப்பும் வராது.
தாங்கள் வாழும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தால் தேர்வு எழுதும் பலரும் பாதுகாப்பில்லாத சுகாதாரச் சூழலால் பல்வேறு கற்பனை செய்ய முடியாத கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். வேறு வழியின்றி ஹோட்டல், விடுதிகள், போன்றவற்றில் குடும்பத்தினருடன் தங்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
தேர்வு மையங்களையும் யூபிஎஸ்சி நிர்வாகம் அதிகரிக்காததால், தேர்வு எழுதுவோர் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை பயணித்து வந்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். ஆதலால், வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் விளக்கம் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், யூபிஎஸ்சி தேர்வு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT