Last Updated : 24 Sep, 2020 12:32 PM

 

Published : 24 Sep 2020 12:32 PM
Last Updated : 24 Sep 2020 12:32 PM

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: கேரள அரசு ஆலோசனை 

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டத்துறையிடம் கேரள அமைச்சரவை முடிவு கோரியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் வரை அவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர். ஆனால், மன்னிப்புக் கோரினால், 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையும் திரும்பப் பெறப் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மேலும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நேற்றுமுன்தினம் அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்தச் சூழலில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பதாகைகளை ஏந்தி அமைதியாகப் போராட்டம் நடத்தினர்.

மாலையில் காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபிஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும், கையொப்பமிடக்கூடாது என்று கூறி கோரி்க்கை மனு அளித்தனர்.

வேளாண் மசோதாக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய சட்ட அமைச்சகத்தைக் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில் “ கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா, சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதும் அவசியம். ஆதலால், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் “ மத்திய அரசு வேளாண் மசோதாக்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். 2019-ம் ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக குரல் கொடுத்த 8 எம்.பி.க்களையும் மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x