Published : 23 Sep 2020 10:30 PM
Last Updated : 23 Sep 2020 10:30 PM
விமானநிலையங்களில் பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி இன்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கான எழுத்துபூர்வ பதிலில் மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கான இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கரோனா சோதனைகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு விரிவான நெறிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. விமான பயணிகளுக்கும், விமான சேவைத் துறையின் பிரிவுகளான, விமான நிறுவனங்கள், விமானநிலையங்கள், விமானங்களை கையாள்பவர்கள் ஆகியோருக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு, முகக்கவசம், முகமூடி, மற்றும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும் விமானங்களின் உள்ளே, கரோனா பரவாமல் தடுக்க காற்று சுத்தப்படுத்தப்படுகிறது.
விமானப் பயணம் ஒரு குறுகிய நேரத்தில் முடிந்து விடும். மார்ச் 25 முதல் மே 24, 2020 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து, மே 25, 2020 முதல் படிப்படியாக துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, விமான போக்குவரத்துத் துறைக்கான மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT