Published : 23 Sep 2020 07:20 PM
Last Updated : 23 Sep 2020 07:20 PM
மத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திமுகவின் மூத்த எம்.பி.யான திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார். அதில் அவரது ஆலோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பரிந்துரைத்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பூஜிய நேரத்தில் பேசியதாவது: இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகள் தொடர்பான தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்றைத் தொகுத்து எழுத 16 நபர்கள் கொண்ட குழுவை நியமனம் செய்து இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தனது எழுத்து மூலமான பதிவின்போது நாடாளு மன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அதன் பாரம்பரிய பெருமைகள் மகத்தானவை என்பதில் நான் மிகுந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
இந்த வரலாற்றைத் தொகுக்க நியமனம் செய்யப்பட்டுள்ள 16 பேரில் 6 பேர் பேராசிரியர்கள். இவர்கள் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றவர்கள் ஆவர்.
இக்குழுவில் சர்ச்சைக்குரிய நபர் கூட உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகும். இந்தியாவின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழிதான்.
ஏராளமான வரலாற்று நிபுணர்கள் தமிழ் மொழியின் ஆராய்ச்சியில் உள்ளனர். ஆனால் தமிழ்மொழி சார்ந்த அறிஞர் ஒருவர் கூட இந்த குழுவில் இடம் பெறாமல் போனது கவலைக்குரியது.
தென்னக மொழிகள் எவற்றுக்கும் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இந்தியாவில் சிறுபான்மைப் பிரிவினராக உள்ள, குறிப்பாக மலைவாழ் மக்கள், மகளிர், மூன்றாம் பாலினத்தவர், வடகிழக்குப் பிராந்தியப் பகுதிகளில் வசிப்போர் மற்றும் மதரீதியான சிறுபான்மையினர் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் இந்த குழுவில் வழங்கப்படவில்லை.
இந்த இனங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி செய்தால் தான் முழுமையான வரலாற்றுப் பாரம்பரியப் பெருமையைத் தொகுத்து எழுதமுடியும். காலனி ஆதிக்கக் காலத்திற்கு முந்தைய இந்தியாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறிய வேண்டுமானால் இந்த மூன்றையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் மிகச் சரியாக அமையும்.
ஆகவே இந்த இனங்களின் பிரதிநிதித்துவ நியமனங்களை இந்த குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த இனங்கள் தான் காலனியாதிக்கத்தின் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவை ஆகும்.
ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே மையப்படுத்தி வரலாற்றைத் தொகுத்து எழுதப் போகிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்ற வகையில் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.
நமதுநாட்டில் ஜாதியப பிரிவினைகளின் தோற்றம் மற்றும் நடத்தப்பட்ட விதம் ஆகியவை பற்றியும் இக்குழு ஆய்வு செய்யவேண்டும். கொண்டாடப்படும் திராவிட இனப் பண்பாடுகள் தொன்மைச் சிறப்புமிக்க தரவுகளைக் கொண்டவை.
எனவே இவற்றையும் சேர்த்து ஆய்வுகள் மேற்கொண்டால்தான் சரித்திரம் சரியான தரத்துடன் திகழும். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி சிவாவின் இந்த உரையில் அளித்த ஆலோசனை மாநிலங்களவைத் தலைவரான எம்.வெங்கைய்ய நாயுடுவிற்கு ஏற்புடையதாக இருந்துள்ளது. இதனால், அப்போது மாநிலங்களவையில் இருந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை அழைத்தவர், ‘திருச்சி சிவா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அனைத்தையும்
கலாச்சாரத்துறை அமைச்சரிடம் கூறி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.’ என அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT