Published : 23 Sep 2020 05:34 PM
Last Updated : 23 Sep 2020 05:34 PM
தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்வோர் தங்களின் ஆதார் எண்களை வழங்குவது கட்டாயம் எனும் விதிமுறை கொண்ட அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
இந்த மசோதா ஏற்கெனவே திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இனிமேல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரின் கையொப்பம் பெற்றபின் சட்டமாகும்.
வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது எந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் அவையைப் புறக்கணித்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாமல் அவையில் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் நிறைவேறியது.
இந்த மசோதா மீது நடந்த சிறிய விவாத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் பேசியதாவது:
“இந்த மசோதா எந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் எதிராகக் கொண்டுவரப்படவில்லை. வெளிப்படைத் தன்மையைப் பராமரிக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் நல்ல தொண்டு நிறுவனங்களின் நலனுக்காகவும், அவர்களின் நல்ல பணிகளுக்காகவும் இது கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா நிச்சயம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.
அதேசமயம்,வெளிப்படைத்தன்மை இல்லாத தொண்டு நிறுவனங்கள் மோசமான அனுபவங்களைச் சந்திக்கலாம். தொண்டு நிறுவனங்களின் நலனுக்காக வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது.
வெளிநாட்டு நிதிகளைப் பெறும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவை 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இந்த மசோதா குறைக்கும். இந்தத் தொகையை மற்ற பிரதான பணிகளுக்குச் செலவு செய்ய உறுதி செய்யும்.
மேலும், தொண்டு நிறுவனங்கள் தங்களின் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை சான்றிதழை மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் இந்த மசோதா அனுமதிக்கிறது. அரசு ஊழியர்கள் யாரும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை வெளியிடவில்லை, முறையாக தணிக்கையிலும் ஈடுபடவில்லை. இனிமேல் அவ்வாறு செய்ய இயலாது.
இனிமேல் தொண்டு நிறுவனங்கள் கண்டிப்பாக ஸ்டேட் வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன்மூலம்தான் வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். நாட்டின் அனைத்து நகரங்களிலும் எஸ்பிஐ வங்கி இருப்பதால்தான் இந்த வங்கியை அரசு தேர்வு செய்தது.
இதற்காக வங்கிக் கணக்கு தொடங்க என்ஜிஓக்கள் டெல்லி வரத் தேவையில்லை, தங்கள் அலுவலகம் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள எஸ்பிஐ வங்கியிலேயே கணக்குத் தொடங்கலாம். கண்டிப்பாக கணக்குத் தொடங்குபவர் தங்களின் ஆதார் எண்ணை வழங்கிட வேண்டும்''.
இவ்வாறு நித்யானந்த ராய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT