Last Updated : 04 Sep, 2015 10:06 AM

 

Published : 04 Sep 2015 10:06 AM
Last Updated : 04 Sep 2015 10:06 AM

இந்தியாவில் கருவாகி பாகிஸ்தானில் பிறந்தவர் எந்த நாட்டு பிரஜை? - டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிக்கலான வழக்கு

இந்தியாவில் கருவாகி, பாகிஸ்தானில் பிறந்த பெண்ணான பூஷ்ரா கான் இந்தியக் குடியுரிமை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் தாய் பாகிஸ்தானுக்கு சுற்றுலா விசாவில் சென்றபோது, விசா காலம் முடிவடையும் முன்பு பூஷ்ரா கான் பிறந்தார். குழந்தை பிறந்த பிறகு பூஷ்ராவின் தாய் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்தார். தற்போது தாய் இறந்து விட்டதால், இந்தியா திரும்பியுள்ள பூஷ்ரா கான், இந்தியக் குடியுரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம் பூரை சேர்ந்த ஷாருக் ஆலம் கானுடன் அதே ஊரை சேர்ந்த மெஹ்ரா கானுக்கு 1986-ல் திரு மணமானது. ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் மெஹ்ரா கணவரைப் பிரிந்து தாய்வீடு சென்று விட்டார். அப்போது கர்ப்பமாக இருந்த மெஹ்ரா, பாகிஸ்தானில் உள்ள தனது சகோதரி மூலம் சுற்றுலா விசா பெற்று, 1988 அக்டோபர் மாதம் கராச்சி சென்றார். அங்கு, நவம்பர் 11-ம் தேதி மகள் பூஷ்ரா கான் பிறந்தார். விசா காலம் முடிந்த பிறகும் மெஹ்ரா கான் பாகிஸ்தானிலேயே சட்டவிரோத மாக தங்கினார். 1996-ல் அவரை ஷாருக் ஆலம் கடிதம் மூலம் விவகாரத்து செய்துவிட்டார்.

சில மாதங்களில் மெஹ்ரா எதிர்பாராதவிதமாக இறந்து விட கராச்சியிலுள்ள சித்தி வீட்டில் வளர்ந்த பூஷ்ரா, அவரது சித்தி மற்றும் உறவினர்களால் கொடு மைக்கு ஆளாகி உள்ளார்.தன் மனைவி இறந்து மகள் கொடுமைப் படுத்தப்படும் தகவல், ராம்பூரில் உள்ள ஷாருக் ஆலமுக்கு 2003-ல் தெரியவந்துள்ளது. இதனால், மகளை இந்தியா வரும்படி அழைத் தார். பூஷ்ரா கடந்த மே 18-ம் தேதி உத்தரப்பிரதேசம் வந்துள்ளார்.

பூஷ்ரா இந்தியாவிலேயே தங்க விரும்புவதால். ஷாருக் ஆலம் தன் மகளுக்கு இந்தியக் குடியுரிமை கோரி மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமர், குடியரசுத் தலைவர், தேசிய மகளிர் ஆணை யம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் யாரிடம் இருந்தும் பதில் வர வில்லை. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், பூஷ்ரா அளித்த விண்ணப்பங்களின் மீதான நிலை குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எனவே, வழக்கு முடியும் வரை ராம்பூரில் தன் தந்தையுடன் வசிக்க மாவட்ட நிர்வாகம் பூஷ்ராவிற்கு அனுமதி வழங்கி யுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பூஷ்ரா கூறும்போது, “ எனது தந்தையை ஒரு வில்லன் போல் சித்தரித்துக் காட்டியதால், அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்து விட்டேன். உண்மை தெரிந்த பின் தந்தையுடன் நிரந்தரமாக இருக்க விரும்புகிறேன். எனது தந்தை இந்தியர் என்பதால் எனக்கு இங்கு வசிக்க முழு உரிமை உள்ளது” என்றார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஷாருக் ஆலம் கூறும்போது, “‘கராச்சியில் என் மனைவி சட்டவிரோதமாக தங்கியபோது பிறந்த பூஷ்ரா பாகிஸ்தானி ஆக முடியாது. பாகிஸ்தானில் 26 வருடங்கள் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளேன்” என்றார்.

பாகிஸ்தானில் மெஹ்ராவுக்கு பூஷ்ரா பிறந்த போது அவரது விசா காலாவதியாகவில்லை. இதனால், இந்தியராகவே கருதப்படும் பூஷ்ராவுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக பாஸ்போர்ட் எடுக்காமல் விட்டது தவறு எனக் கூறப்படுகிறது. பூஷ்ரா 26 வருடங்களுக்கு பிறகு இந்திய பாஸ்போர்ட்டுக்கு முயலாமல், பாகிஸ்தானிடம் பெற்றிருப்பது நிலைமையை சிக்கலாக்கி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x