Published : 23 Sep 2020 01:52 PM
Last Updated : 23 Sep 2020 01:52 PM
மாநிலங்களவையிலி்ருந்து வரும் நவம்பர் மாதம் 11 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்குப் பிரியாவிடை அளித்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.
நவம்பர் மாதம் ஓய்வு பெறும் 11 எம்.பி.க்கள் அனைவரும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஓய்வு பெறும் எம்.பி.க்களில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. வீர் சிங், காங்கிரஸ் கட்சி எம்.பி. ராஜ் பப்பார் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர்கள் தவிர்த்து, சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி.க்கள் ஜாவித் அலி கான், ரவி பிரகாஷ் வர்மா, சந்தர்பால் சிங் யாதவ், காங்கிரஸின் பி.எல்.பூனியா, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. ராஜாராம், பாஜகவின் நீரஜ் சேகர், அருண் சிங் ஆகியோர் அடங்குவர்.
எம்.பி.க்களுக்குப் பிரியாவிடை வழங்கும்போது அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், “நவம்பரில் அவையிலிருந்து 11 எம்.பி.க்கள் விடை பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 11 பேரில் பலர் மீண்டும் அவைக்குத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஓய்வு பெறும் எம்.பி.க்கள் விருப்பப்பட்டால் பேசலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், ஓய்வு பெறும் எம்.பி.க்களில் பலர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் அவை புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அவைக்கு வரவில்லை.
ஆனால், சமாஜ்வாதிக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்.பி. நீரஜ் சேகர் பேசுகையில், “நல்வாய்ப்பாக முதலில் மக்களவைக்கும் பின்னர் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான சந்திரசேகருடன் அவைக்கு வந்துள்ளேன்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஓடி விளையாடியிருக்கிறேன். அப்போது இந்த அளவுக்குக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இப்போது நான் எம்.பி.யாக இங்கு வந்திருக்கிறேன். நான் அனைவரையும் பிரியநேர்கையில் வருத்தமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவை இன்றுடன் முடிகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரை அக்டோபர் 1-ம் தேதிவரை 18 நாட்கள் தொடர்ந்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், கரோனாவில் அடுத்தடுத்து பல எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டதால், அவர்களின் பாதுகாப்புக் கருதி கூட்டத்தொடரைப் பாதியிலேயே முடித்துக் கொண்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் மத்திய அரசும், அலுவல் ஆய்வுக்குழுவும் ஆலோசனை நடத்தியதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தொடர் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT