Published : 23 Sep 2020 08:05 AM
Last Updated : 23 Sep 2020 08:05 AM
இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 14 மணி நேரம் வரை நீடித்தது. அப்போது எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சீனாவிடம் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 10-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று முன்தினம் லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதியான மோல்டாவில் சந்தித்துப் பேசினர். இந்திய ராணுவ தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், அவருக்கு அடுத்த பதவியில் உள்ள லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனனும் பங்கேற்றனர்.
லடாக்கின் லே நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் தலைவ ராக உள்ள ஹரிந்தர் சிங் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து பிஜிகே மேனன் அந்த படைப்பிரிவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
எனவே அவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். முதல்முறையாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
சீன ராணுவ தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பிராந்திய கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது. சுமார் 14 மணி நேரம் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
எல்லையில் பதற்றத்தை தணிக்க ஏற்படுத்தப்பட்ட 5 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் சீன படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
வலுவான நிலையில் இந்தியா
சீன ராணுவத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது. கிழக்கு லடாக்கின் சுமார் 20 பகுதிகளில் இந்தியா ஆதிக்க நிலையில் உள்ளது. குறிப்பாக லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதிகளில் இந்திய ராணுவம் வலுவாக உள்ளது.
எல்லையில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அவ்வப்போது அதிர்ச்சி அளித்து வருகிறது. கிழக்கு லடாக்கின் 6 மலை முகடுகளை இந்திய ராணுவம் நேற்று முன்தினம் தனது வசமாக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT