Published : 22 Sep 2020 06:27 PM
Last Updated : 22 Sep 2020 06:27 PM
என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், மாநிலங்களவையை நடத்தும் தலைவர் அவை உறுப்பினர்களை நடத்திய விதத்தை இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. அவர்களின் கருத்துகளைக் கூறுவதற்குக் கூட அனுமதியளிக்காதது வேதனையாக இருக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் ஞாயிறு அன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எறிய முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும்வரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார். 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மும்பையில் சரத் பவார் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
''மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் தவறாக, விதிமுறைகளை மீறி துணைத் தலைவரிடம் நடந்து கொண்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நான் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறேன்.
நான் கேட்கிறேன், ஒரே நேரத்தில் இந்த இரு மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை. தனித்தனியாக இரு மசோதாக்களையும் விவாதித்து நிறைவேற்றி இருக்கலாம்.
மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர் அல்லது அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தும் ஒருவர், இந்த விவகாரத்தைத் தீவிரமாகப் பார்த்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற மூத்த உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அது நடக்கவில்லை.
மாநிலங்களவையில் மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவைத்தலைவர் விதிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துணைத் தலைவரிடம் தெரிவித்தார்கள். ஆனால், துணைத் தலைவராக இருக்கும் ஒருவர் குறைந்தபட்சம் விதிகளைக் கேட்டறிந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது நடக்கவில்லை. உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதுவும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதுதான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டார்கள்.
நான் கடந்த 50 ஆண்டுகளாக மகாராஷ்டிர அரசியலிலும், நாட்டிலும் பணியாற்றி இருக்கிறேன்.ஆனால், அவை நடத்தும் துணைத் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நடத்திய விதத்தை இதற்குமுன் நான் பார்த்தது இல்லை.
மாநிலங்களவையில் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்வுகளையும் நான் இதற்குமுன் கண்டதில்லை.
துணைத் தலைவராக இருக்கும் பிஹாரைச் சேர்ந்தவர், அதே மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த கர்பூரி தாக்கூரின் சித்தாந்தங்களைப் பின்பற்ற வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், உரிமைகளையும் மதிப்பதில் கர்பூரி தாக்கூர் மிகச் சிறந்தவர்.
ஆனால், ஹரிவன்ஸ் அனைத்துச் சித்தாந்தங்களையும் புறக்கணித்தார். உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. இருந்தபோதிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் வேதனைகளை மகாத்மா காந்தி சிலை முன் அமைதியாகவே தெரிவித்தார்கள்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஹரிவன்ஸ் தேநீர் கொண்டு சென்றார் எனும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆனால், எம்.பி.க்கள் அனைவரும் தேநீரைப் பருகாமல் நிராகரித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இது ஒருவகையான காந்திய வழிப் போராட்டம். ஆனால், காந்திய சித்தாந்தங்களை இப்போது அவமானப்படுத்தப்பட்டதுபோல் இதற்குமுன் பார்த்தது இல்லை''.
இவ்வாரு சரத் பவார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT