Published : 22 Sep 2020 05:39 PM
Last Updated : 22 Sep 2020 05:39 PM
எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் இன்று 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயின்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எறிய முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முடியும்வரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உத்தரவைத் திரும்பப் பெறும்வரை அவைக்கு வரப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்து இன்று அவைப் புறக்கணிப்பு செய்தனர்.
இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவையில் பாஜக எம்.பி.க்கள், கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி ஆகியவற்றின் எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்தக் கட்சிகள்தான் பல்வேறு நிகழ்வுகளில் மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த 7 மசோதாக்கள் மீதும் அந்தந்தத் துறை அமைசர்கள் சிறிய விளக்கம் மட்டும் அளித்து அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவதாக அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐஐடிக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா நிறைவேறியது.
அதன்பின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா அதாவது, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மசோதா நிறைவேறியது.
குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா, ராஷ்ட்ரிய ராகாஷ் பல்கலைக்கழக மசோதா ஆகியவை நிறைவேறின. வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மாநிலங்களவை செயல்படும் நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக அலுவல் பணிகள் காலை 10.29 மணிக்குத் தொடங்கி, 2 மணிக்கு முடியும். கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்த 7 மசோதாக்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 7 மசோதாக்களும் இனிமேல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதல் பெற்றவுடன் சட்டமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT