Published : 22 Sep 2020 05:16 PM
Last Updated : 22 Sep 2020 05:16 PM
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெறும்வரை அவை புறக்கணிப்பை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலையில், மக்களவையையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயின்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எறிய முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று அவை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவையில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.இளமாறன் கரீம் ஆகியோரைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தனர்.
இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
8 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும்வரை மாநிலங்களவைக்குள் வரமாட்டோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையைப் புறக்கணித்துச் சென்றனர்.
அதேசமயம், மத்திய அரசோ, 8 எம்.பி.க்களும் மன்னிப்புக் கோரினால் அவர்களை அவைக்குள் அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம் எனத் தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவை, எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இன்றிச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரீக் ஓ பிரையன் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த எம்.பி.க்களும் இல்லை. எனக்குக் கிடைத்தத் தகவலின்படி, மக்களவையிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக அவையைப் புறக்கணிப்பு செய்யப்போகிறார்கள்.
இது உண்மையில் நடந்தால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே முழுமையாக இல்லாத நிலை ஏற்படும். மத்திய அரசு பாசிச மனப்பான்மையுடன் செயல்பட்டு, ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எங்கள் போராட்டம் தொடரும்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT