Published : 22 Sep 2020 03:32 PM
Last Updated : 22 Sep 2020 03:32 PM
முதலீட்டாளர்களின் நலனைக் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வங்கி ஒழுங்கு முறைத் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் கடந்த 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றபின், இந்த மசோதா சட்டமாக அவசரச்சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும்
பிஎம்சி வங்கி ஊழலைத் தொடர்ந்து இந்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் மூலம், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல், முதலீட்டை அதிகப்படுத்துதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல், சிறந்த வங்கி வசதி மக்களுக்கு ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்க வகை செய்யப்படும்.
மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாாரமன் பேசுகையில் “ வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திருத்தம் முழுமையாக வங்கி முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டுள்ளது. வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு சொசைட்டிக்கு மட்டுமே இது பொருந்தும்.
கரோனா காலத்தில் பல கூட்டுறவு வங்கிகள் பெரும் அழுத்தத்தில், நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. அந்த கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.
வர்த்தகரீதியான வங்கி விதிகளுக்கு உட்பட்டு இருந்ததால், யெஸ் வங்கியின் சிக்கலை அரசால் விரைவாக தீர்க்க முடிந்தது. ஆனால், பிஎம்சி வங்கிச் சிக்கலை இன்னும் தீர்க்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்
மாநிலக் கூட்டுறவு சட்டங்களின் கீழ் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் மாநிலப் பதிவாளர்களின் அதிகாரங்களை இந்தத் திருத்தங்கள் பாதிக்காது.
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதை தங்கள் அடிப்படை குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாகவும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கி,வங்கியாளர்,வங்கியியல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் காசோலைகளைப் பணமாக மாற்றித் தராத நிறுவனங்களுக்கு இந்த சட்டத் திருத்தங்கள் பொருந்தாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT