Last Updated : 22 Sep, 2020 12:34 PM

2  

Published : 22 Sep 2020 12:34 PM
Last Updated : 22 Sep 2020 12:34 PM

ரயில்வே திட்டங்களை நிறுத்தி வைத்தால் வேலைவாய்ப்பு எப்படி உருவாகும்? - பியூஷ் கோயல் அளித்த பதில் மீது சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்வி

புதுடெல்லி

ரயில்வேயின் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் அளித்துள்ளார். இதை அவர் மக்களவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பியான சு.வெங்கடேசன் கேள்விக்கானப் பதிலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பியக் கேள்வியில், ’ரயில்வே பின்க் புத்தகத்தில் (Pink book) உள்ள 2019-20 வரையில் ஒப்புதல் பெற்று பெருமளவில் பணி துவக்கப்படாத திட்டங்கள் உள்ளன.

2018-19, 2019-20 ஆண்டிற்கான வெவ்வேறு இடங்களிலான பணிகளை இணைக்கிற குடைத்திட்டங்களும் உள்ளன. இவை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மக்களவையில் எழுத்துபூர்வப் பதில் அளித்த மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ’ஆமாம். இந்த நிதியாண்டு இறுதி வரை புதிய திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு மற்றும் அவசரப்பணிகள் மட்டும் நிறுத்தப்படாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சிபிஎம் எம்.பியான சு. வெங்கடேசன் எம்.பி கருத்து கூறுகையில், ’ரயில்வே திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வருந்தத் தக்க முடிவு.

ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது என்பது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி, வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும். இந்தியா மிகப் பெரும் வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்,

வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டுமென்பதே சரியாக இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள திட்டங்களையே முடக்குவது என்பது எதிர் திசையில் பயணிப்பதாகும்.

இது ஏழை எளிய குடும்பங்களை, இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகும். மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்குவதன் மூலம் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள அவசியம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் எழுத்துபூர்வ பதிலில், ‘தமிழக எல்லைக்குள் வரும் எந்த புதிய வழிப்பாதை, அகலப்பாதை, இரட்டைவழித் திட்டமும் தற்காலிக நிறுத்தப் பட்டியலில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சு.வெங்கடேசன் தொடர்ந்து கூறும்போது, ‘ஆனால் தமிழகத்தில் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. அமைச்சரின் இப்பதிலை தென்னக ரயில்வே பொது மேலாளர் உறுதி செய்வதோடு, அதற்கான நிதி தங்கு தடையின்றி வந்துள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.’ என வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x