Published : 22 Sep 2020 12:18 PM
Last Updated : 22 Sep 2020 12:18 PM
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால், நாடாளுன்றம் எதற்கு, தேர்தல் எதற்காக நடத்த வேண்டும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்று எதற்காகக் கூட்டுகிறீர்கள் என்று மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இரு வேளாண் மசோதாக்களை கடந்த ஞாயிறன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, வரம்பு மீறிச் செயல்பட்டதாகக் கூறி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், மார்க்சிஸ்ட் எம்.பி.இளமாறன் கரீம் ஆகிய 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
தங்களின் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசைக் கடுமையாகச் சாடியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். மழை, கொடும் வெயில், கொசுக்கடி, தங்கள் வசதிகளைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்ற வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளார்கள்.
8 எம்.பி.க்களும் தங்கள் வசதிக்காக எதையும் கேட்கவில்லை, தங்களுக்காகப் போரிடவில்லை. ஜனநாயகத்துக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும் போராடி வருகிறார்கள். தேசத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று தேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இதுபோன்ற ஆபத்தான மசோதாவை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியுள்ளீர்கள். அப்படியென்றால், நாடாளுமன்றம் இருப்பதன் அர்த்தம் என்ன, தேர்தலுக்கு அர்த்தம் என்ன, எதற்காக இருக்கிறது? சட்டத்தை இதுபோன்ற வழியில் கொண்டுவந்தால், எதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடர்?''.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் கூறுகையில், “ஆங்கிலேயர் ஆட்சியும், மத்தியில் நடைபெறும் ஆட்சியும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு எதிரான கொடுமைகளை ஆங்கிலேயர்கள் செய்தார்கள்.
இதற்காக கறுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து அடக்குமுறைகளை ஏவினார்கள். காந்திஜியையும், மற்ற தலைவர்களையும் ஆங்கிலேயர்கள் சந்தித்தபோது, இதேபோன்றுதான் தேநீர் வழங்கினார்கள். நம்முடைய ஆட்சியாளர்களும் அதே வழியில்தான் ஆட்சி நடத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்ட8 எம்.பி.க்களுக்குத் தேநீர் வழங்கியதை பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டி இருந்தார்.
பிரதமர் மோடியின் ட்விட்டர் கருத்துக்குப் பதில் அளித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ட்விட்டரில் அளித்த பதிலில், “நாங்கள் தேநீருக்காகப் போராடவில்லை. எங்கள் விவசாயிகளிடம் இருந்து நீங்கள் பறித்த உரிமைகளுக்காகப் போராடுகிறோம். நான் உங்களுக்குப் பணிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் தேநீரை எடுத்துச் செல்லுங்கள். எங்கள் விவசாயிகளின் உரிமைகளைக் கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT